தேசிய சீனியர் ஸ்குவாஷ்: 18-வது முறையாக பட்டம் வென்றார், ஜோஸ்னா ஆண்கள் பிரிவில் கோஷல் சாம்பியன்


தேசிய சீனியர் ஸ்குவாஷ்: 18-வது முறையாக பட்டம் வென்றார், ஜோஸ்னா ஆண்கள் பிரிவில் கோஷல் சாம்பியன்
x
தினத்தந்தி 15 Feb 2020 11:12 PM GMT (Updated: 2020-02-16T04:42:48+05:30)

77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் உள்ள ஸ்குவாஷ் அரங்கில் நடந்து வந்தது.

சென்னை,

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தமிழக வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, தன்வி கன்னாவை (டெல்லி) எதிர்கொண்டார். முதல் செட்டை இழந்த ஜோஸ்னா அதன் பிறகு சுதாரித்து மீண்டு 8-11, 11-6, 11-4, 11-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். சென்னையைச் சேர்ந்த 33 வயதான ஜோஸ்னாவின் 18-வது தேசிய சாம்பியன்ஷிப் பட்டம் இதுவாகும். 2000-ம் ஆண்டு, முதல் முறையாக மகுடம் சூடிய ஜோஸ்னா, அதன் பிறகு இரண்டு முறை மட்டுமே தோற்று இருக்கிறார். அந்த தோல்விகளும் இறுதி ஆட்டத்தில் தழுவியவை ஆகும். தேசிய பட்டத்தை அதிக முறை ருசித்தவர் என்ற சிறப்பு ஜோஸ்னா வசமே உள்ளது. 16 முறை இந்த பட்டத்தை வென்றிருந்த புவனேஸ்வரி குமாரியின் சாதனையை கடந்த ஆண்டே முறியடித்து விட்டார்.

இதன் ஆண்கள் பிரிவில் போட்டித் தரநிலையில் முதலிடம் வகிக்கும் தமிழக வீரர் சவுரவ் கோஷல் 11-6, 11-5, 11-6 என்ற நேர் செட் கணக்கில் அபிஷேக் பிரதனை (மராட்டியம்) தோற்கடித்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டினார். சவுரவ் கோஷலுக்கு இது 13-வது தேசிய பட்டமாகும்.

இதன் ஜூனியர் பிரிவில் (19 வயதுக்குட்பட்டோர்) ஆண்கள் பிரிவில் கனாவ் நானாவதியும் (தமிழகம்), பெண்கள் பிரிவில் அபிஷேகா ஷனோனும் (தமிழகம்) பட்டம் வென்றனர்.

Next Story