சமூகவலைதளத்தில் கோலி புதிய சாதனை


சமூகவலைதளத்தில் கோலி புதிய சாதனை
x
தினத்தந்தி 18 Feb 2020 10:15 PM GMT (Updated: 18 Feb 2020 9:29 PM GMT)

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனிப்பட்ட முறையில் இன்னொரு சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கிறார்.

விராட் கோலி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி அதில் அவ்வப்போது ருசிகர தகவல்களையும், போட்டோக்களையும் பகிர்வது உண்டு. இன்ஸ்டாகிராமில் அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தொட்டுள்ளது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் கோலி தான். இந்த வகையில் 2-வது இடத்தில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா (பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 99 லட்சம் பேர்) உள்ளார்.

சானியா ஜோடி வெற்றி: துபாய் ஓபன் டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, பிரான்சின் கரோலின் கார்சியா ஜோடி 6-4, 4-6, 10-8 என்ற செட் ணக்கில் குட்யாவ்ட்செவா (ரஷியா)- கேத்ரினா ஸ்ரீபோட்னிக் (சுலோவெனியா) இணையை சாய்த்தது. ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) 7-6 (2), 3-6, 3-6 என்ற செட் கணக்கில் ரைபகினாவிடம் (கஜகஸ்தான்) அதிர்ச்சிகரமாக வீழ்ந்தார்.

57 நாட்கள் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்: 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை ஏற்கனவே அணி நிர்வாகிகளின் மூலம் கசிந்த நிலையில், அதிகாரபூர்வ அட்டவணையை ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று வெளியிட்டது. இதன்படி மார்ச் 29-ந்தேதி தொடங்கி மே 24-ந்தேதி வரை மொத்தம் 57 நாட்கள் நடத்தப்படுகிறது. இது முந்தைய சீசனை விட 6 நாட்கள் கூடுதல் ஆகும். மார்ச் 29-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும், சென்னை சூப்பர் கிங்சும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் (இரவு 8 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன. இறுதிப்போட்டிக்குரிய இடம் விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒஷானே தாமஸ் காரில் சென்ற போது, இன்னொரு வாகனத்தில் மோதி விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார். ஜமைக்காவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 23 வயதான ஒஷானே தாமசை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. விபத்தில் காயமடைந்திருப்பதால் அவர் ஐ.பி.எல்.-ல் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Next Story
  • chat