2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் சண்டிகாரில் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகள்


2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் சண்டிகாரில் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகள்
x

2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் சண்டிகாரில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகள் இடம்பெற உள்ளன.

லண்டன்,

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் 2022-ம் ஆண்டு ஜூலை 27-ந் தேதி முதல் ஆகஸ்டு 7-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டிகள் நீக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் கடந்த ஆண்டில் அறிவித்தனர். இதற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு உள்ள இந்த இரு பந்தயங்களையும் போட்டியில் சேர்க்காவிட்டால் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை இந்தியா புறக்கணிக்க நேரிடலாம் என்று எச்சரிக்கை விடுத்தது. இதனை அடுத்து காமன்வெல்த் விளையாட்டு சம்மேளன நிர்வாகிகள் கடந்த ஆண்டில் இந்தியா வந்து, இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்றும் அதில் பதக்கம் வெல்லும் நாடுகளின் பெயரை காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இறுதிபதக்க பட்டியலுடன் சேர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. தற்போது இந்த பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் லண்டனில் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்தியாவில் (சண்டிகாரில்) காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் மற்றும் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்த அனுமதி அளிப்பது என்றும் அதில் பதக்கம் வெல்லும் நாடுகளின் பட்டியலை, காமன்வெல்த் விளையாட்டு போட்டி முடிவடைந்த ஒரு வாரத்தில் பதக்கபட்டியலுடன் இணைத்து இறுதி பட்டியலை வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனம் நேற்று அறிவித்துள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான செலவுகளை தேசிய ரைபிள் சங்கமும், வில்வித்தை போட்டிக்கான செலவுகளை மத்திய அரசும் ஏற்கும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தது நினைவிருக்கலாம். காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் இந்த முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம், தேசிய ரைபிள் சங்கம் ஆகியவை வரவேற்று இருக்கின்றன.


Next Story