ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுபவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு: அனைத்து தேசிய பயிற்சி முகாம்களும் தள்ளிவைப்பு


ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுபவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு: அனைத்து தேசிய பயிற்சி முகாம்களும் தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 18 March 2020 12:14 AM GMT (Updated: 18 March 2020 12:14 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுபவர்களுக்கு நடைபெறும் முகாமை தவிர மற்ற அனைத்து தேசிய பயிற்சி முகாம்களும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் கோரதாண்டவத்தால் பல்வேறு நாடுகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போய் உள்ளது. இதில் விளையாட்டு உலகும் விதி விலக்கல்ல. சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் இருக்கின்றன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகும் இந்திய வீரர்களுக்கான பயிற்சி முகாம் தவிர மற்ற அனைத்து தேசிய பயிற்சி முகாம்களும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று முதல் மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அத்துடன் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வீரர்கள் சொந்த ஊர் திரும்ப இந்திய விளையாட்டு ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய சிறப்பு மையம் மற்றும் இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி விடுதியின் பயிற்சி முகாம்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள பதிவில் ‘விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இதுவாகும். இதனால் இளம் வீரர்கள் யாரும் வருத்தம் அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். சூழ்நிலையை ஆய்வு செய்த பிறகு இந்த பயிற்சி முகாம்கள் விரைவில் தொடங்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்துள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை போட்டிகள், விளையாட்டு விழாக்கள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் எதுவும் நடைபெறாது. வீரர்கள் தங்கும் விளையாட்டு விடுதிகள் வருகிற 20-ந் தேதி வரை செயல்படும். அடுத்த சில நாட்களில் தேர்வு எழுதும் வீரர்கள் பரீட்சை முடியும் வரை விடுதியில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தொற்று நோய் பரவாமல் இருப்பதற்கான முழு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வீடு திரும்பும் வீரர்களுக்கு உரிய பயண வசதிகள் செய்து கொடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

* பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நேற்றும், இன்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டி நடக்க இருந்தது. இந்த போட்டி ரசிகர்கள் இன்றி நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது. இந்த போட்டிக்கான மாற்று தேதி குறித்த விவரம் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தை தொடர்ந்து இந்திய குத்துச்சண்டை சம்மேளனமும் கொரோனா பீதி காரணமாக தனது தலைமை அலுவலகத்தை தற்காலிகமாக மூட முடிவு செய்துள்ளது. இது குறித்து இந்திய குத்துச்சண்டை சம்மேளன செயல் இயக்குனர் சாசேத்தி அளித்த பேட்டியில், ‘இன்று முதல் இந்திய குத்துச்சண்டை நிர்வாகிகளும், ஊழியர்களும் வீட்டில் இருந்து அலுவலக பணிகளை மேற்கொள்ள முடிவு செய்து இருக்கிறோம். ஒரு வாரம் கழித்து சூழ்நிலையை ஆய்வு செய்த பிறகு அடுத்த கட்ட திட்டம் குறித்து முடிவு செய்யப்படும். இதே நிலை நீடித்தால் இந்த மாதம் இறுதி வரை வீட்டில் இருந்து பணிகளை கவனிப்போம்’ என்று தெரிவித்தார்.


Next Story