முன்னணி கூடைப்பந்து, கால்பந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு


முன்னணி கூடைப்பந்து, கால்பந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 19 March 2020 3:03 AM GMT (Updated: 19 March 2020 3:03 AM GMT)

அமெரிக்காவை சேர்ந்த முன்னணி கூடைப்பந்து வீரர் கெவின் டுரன்ட், பிரான்ஸ் கால்பந்து வீரர் பிளேஸ் மாட்டுடி ஆகியோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வாஷிங்டன்,

சீனாவில் தோன்றிய கொரோனா வைரசின் கோரதாண்டவம் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருவதுடன், பலத்த பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசின் தாக்கம் விளையாட்டு வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. சர்வதேச விளையாட்டு போட்டிகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீடுகளில் முடங்கி கிடக்கும் வீரர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது வெளிஉலகுக்கு தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் புகழ்பெற்ற என்.பி.ஏ.கூடைப்பந்து போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த போட்டி தொடரில் புரூக்ளின் நெட்ஸ் அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரர் கெவின் டுரன்ட் உள்பட அந்த அணியில் இடம் பிடித்து இருந்த 4 வீரர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

புரூக்ளின் நெட்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் அந்த அணியுடன் சமீபத்தில் விளையாடிய எதிரணியில் இடம் பெற்ற வீரர்கள் மற்றும் வீரர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களும் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 31 வயதான கெவின் டுரன்ட் உள்ளிட்ட 4 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். அந்த அணியின் மற்ற வீரர்களும் தங்களை தானே தனிமைப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் இத்தாலியை சேர்ந்த கால்பந்து கிளப்பான யுவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் நடுகள வீரர் பிளேஸ் மாட்டுடியும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார். 2018-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த 32 வயதான பிளேஸ் மாட்டுடிக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தாக்கம் இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்று யுவென்டஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே யுவென்டஸ் அணி வீரர் டேனியல் ருகானிக்கு (இத்தாலி) முதலில் கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அவருக்கு நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை என்று மறுக்கப்பட்டு இருக்கிறது.

Next Story