‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும்’ இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை


‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும்’  இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை
x
தினத்தந்தி 19 March 2020 11:45 PM GMT (Updated: 19 March 2020 11:19 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இந்த பிரபஞ்சத்தையே ஆட்டிபடைக்கும் கொரோனா வைரசின் அசுரவேக தாக்குதல் தீவிரமடைந்து வருவதால், ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா அல்லது தள்ளிப்போகுமா? என்ற கேள்வி நீண்டு கொண்டே போகிறது. இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் அதற்குள் நிலைமை சரியாகி போட்டியை நடத்துவதற்குரிய சாதகமான சூழல் உருவாகி விடும் என்று ஜப்பான் அரசாங்கம் நம்புகிறது.

இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று கூறியதாவது:-

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் சீரழிவை ஏற்படுத்தி விட்டது. ஆனால் ஓரிரு மாதங்களில் இந்த மோசமான நிலைமை சரியாகிவிடும் என்று நம்புகிறோம். கொரோனா உருவான இடமான சீனாவில் ஏற்கனவே அது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. எனவே ஒலிம்பிக் போட்டி திட்டமிட்ட நேரத்தில் எந்தவித இடையூறும் இன்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.) தான் எங்களது தலைமை அமைப்பு. அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதை நாங்கள் பின்பற்ற வேண்டும். அவர்கள் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவித்தால், அதன் பிறகு எத்தகைய மிரட்டல் இருந்தாலும் நாங்கள் போட்டியில் பங்கேற்று தான் ஆகவேண்டும்.

வீரர்கள் தயாராவதில் பாதிப்பு

கொரோனா பரவலால் ஒலிம்பிக் போட்டிக்கு எங்களது வீரர், வீராங்கனைகள் தயாராகுவது உண்மையிலேயே பாதிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள், சோதனை போட்டித் தொடர்கள், வெளிநாட்டில் நடக்க இருந்த பயிற்சி முகாம்கள் இவை எல்லாம் கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்டு இருக்கின்றன. சில ரத்தாகியுள்ளன. ஆனால் இந்தியா மட்டுமல்ல, எல்லா நாடுகளும் இதே நிலைமையை தான் எதிர்கொண்டு இருக்கின்றன. போட்டியில் களம் இறங்கும் ஒவ்வொரு நாடும் இதே பாதிப்பில் உள்ளன. எனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பதக்கம் வெல்வோம் என்று இப்போதும் எதிர்பார்க்கிறோம்.

எங்களது வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதையும், அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மேலும் இந்த கடினமான தருணத்தில் மத்திய அரசுடனும், டோக்கியா ஒலிம்பிக் கமிட்டியினருடனும், ஐ.ஓ.சி.யுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம்.

இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.

வீட்டில் இருந்து வேலை

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் வேலைசெய்யும் ஊழியர்களை வருகிற திங்கட்கிழமை முதல் வீட்டில் இருந்து பணியாற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எங்களது ஊழியர்களின் பாதுகாப்பு விஷயத்தில் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை என்று ஒலிம்பிக் சங்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டின் ஒருங்கிணைப்பு கமிஷன் உறுப்பினர் அளித்த பேட்டியில் ‘ஒலிம்பிக் போட்டி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்துக்கு தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். தற்போதைய தருணத்தில் எதுவும் சாத்தியமே’ என்றார்.

Next Story