அடுத்த ஆண்டுக்கான உலக குத்துச்சண்டை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா இழந்தது

அடுத்த ஆண்டுக்கான உலக குத்துச்சண்டை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா இழந்தது.
புதுடெல்லி,
அடுத்த ஆண்டுக்கான (2021) உலக ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை டெல்லியில் நடத்துவதற்கான உரிமையை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் பெற்று இருந்தது. கடந்த 2017-ம் ஆண்டில் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்துடன் இதற்கான ஒப்பந்தத்தை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் செய்தது. இந்த போட்டி உரிமத்துக்கான கட்டணமாக ரூ.30 கோடியை சர்வதேச குத்துச்சண்டை சங்கத்துக்கு கடந்த ஆண்டு (2019) டிசம்பர் 2-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஆனால் அதற்கான தொகையை இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் இன்னும் செலுத்தவில்லை. இதனை அடுத்து, உலக ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவதற்காக இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு வழங்கி இருந்த உரிமத்தை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் இந்த போட்டியை நடத்தும் உரிமையை செர்பியாவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. அத்துடன் போட்டி கட்டணத்தை கட்ட தவறியதற்காக இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்துக்கு ரூ.3¾ கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அபய் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் சுவிட்சர்லாந்து வங்கிகணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் செர்பியாவில் உள்ள வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் உள்ள வங்கிகள் மூலம் செர்பியாவுக்கு பணம் அனுப்புவதில் சிக்கல் இருக்கிறது. இந்த பிரச்சினையை சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தீர்த்து வைக்காமல், போட்டிக்கான உரிமத்தை ரத்து செய்து இருப்பதுடன், அபராதமும் விதித்து இருப்பது அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கிறது. அபராதத்தை ரத்து செய்வார்கள் என்றும் வருங்காலத்தில் நாங்கள் உலக போட்டியை நடத்துவோம் என்றும் நம்புகிறோம்‘ என்றார்.
Related Tags :
Next Story