வயது கூடுவதை பற்றி கவலைப்படவில்லை தங்கம் வெல்வதே உறுதி - மேரிகோம்


வயது கூடுவதை பற்றி கவலைப்படவில்லை  தங்கம்  வெல்வதே உறுதி - மேரிகோம்
x
தினத்தந்தி 27 May 2020 12:53 PM GMT (Updated: 27 May 2020 1:52 PM GMT)

வயது கூடுவதை பற்றி கவலைப்படவில்லை அடுத்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே உறுதி என குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் தெரிவித்துள்ளார்.


இம்பால்,

6 முறை உலக சாம்பியன் மற்றும் ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனையும், தேசிய முகாம்களிலும் வெளிநாட்டில் பயிற்சிப் பெற்றுவந்த மேரிகோம். தற்போது அடுத்த ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்ல வேண்டுமென்ற லட்சியத்துடன் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் கூறியதாவது:-

லாக் டவுனில் வீட்டிலேயே தனித்திருப்பது சிரமம் தான் என்றாலும், நோய் தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள இதைவிட சிறந்த வழி எதுவுமில்லை. எந்த நேரமும் எதுவும் நிகழலாம் என்ற சூழ்நிலையில் வெளியில் செல்வது மிகவும் ஆபத்தானது.எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற விளையாட்டு வீரா்களுக்கு இது ஒரு சவாலான நேரம்தான் என்றாலும் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடப்பதை தவிர வேறு வழியில்லை.

என்னைப் பொருத்தவரை வீட்டிற்குள்ளேயே இருந்த நேரத்திலும் தினமும் பயிற்சி செய்வதை விடவில்லை. ஏனெனில் அடுத்து பங்கேற்கும் போட்டிகளுக்கு இந்த பயிற்சியும், உடல் தகுதியும் மிகவும் தேவை. உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது விளையாட்டு வீரா்களுக்கு மட்டுமல்ல. சாதாரண மக்களுக்கும் முக்கியம். நீண்ட இடைவெளிக்குப் பின் தொடர்ந்தாற்போல் வீட்டில் குடும்பத்தினருடன் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

என் மூன்று குழந்தைகளுக்கும், கணவருக்கும் தேவையானவற்றை சமைத்து தருவது திருப்தியாக இருக்கிறது. ஸ்பெஷலாக  ஏதும் எனக்கு சமைக்கத் தெரியாது. பயிற்சி சமயத்தில் பூரி, சப்ஜி போன்றவைகளை சாப்பிடக் கூடாது என்பதால், இப்போது வீட்டில் அவற்றை செய்து தருகிறேன். இம்பாலில் நான் நடத்திவரும் அகாடமியில் பயிற்சிப் பெற்று வந்த மாணவா்களை முன்கூட்டியே அவரவர் வீட்டிற்கு அனுப்பிவிட்டேன். 

இம்பாலில் நான் தங்கியிருக்கும் நேரங்களில் அகாடமியில்  பயிற்சிகள் முறையாக நடக்கிறதா என்பதை நேரடியாக கவனிப்பதுண்டு. இப்போது எல்லோரும் வீட்டிற்குள் இருப்பதால், மாணவா்களுடன் அதிகநேரம் செலவிட, முடியவில்லை. நான் சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவள் என்பதால், இன்று உயா்ந்த நிலையை அடைய எத்தனை போராட்டங்களை சந்திக்க நோ்ந்தது என்பதை உணா்ந்துள்ளதால், என்னுடைய மாணவா்களுக்கு தேவையான உதவிகளை, அரசு வழிகாட்டுதலின்படி செய்து தருகிறேன். 

ஒலிம்பிக் போட்டிகளை அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைத்திருப்பதால், உங்களுக்கு மேலும் ஒரு வயது கூடுதலாகிறதே, போட்டியில் பங்கேற்கும் சக்தி இருக்குமா என்று சிலா் என்னிடம் கேட்டதுண்டு, என்னுடைய உடல் தகுதி மற்றும் அனுபவத்தின் மீது நம்பிக்கை இருப்பதால், வயது கூடுவதை பற்றி நான் கவலைப்படவில்லை. எப்படியும் தங்கம் வெல்வேன் என்ற உறுதி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story