டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: கால்இறுதியில் செரீனா வில்லியம்ஸ்


டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: கால்இறுதியில் செரீனா வில்லியம்ஸ்
x
தினத்தந்தி 15 Aug 2020 12:15 AM GMT (Updated: 15 Aug 2020 12:15 AM GMT)

டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 2வது சுற்றில் வெற்றிபெற்ற செரீனா வில்லியம்ஸ் கால்இறுதிக்கு முன்னேறினார்.


* இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹரா அளித்த பேட்டியில், ‘பொல்லார்ட், இம்ரான் தாஹிர், ரஷித்கான் போன்ற வீரர்கள் வெஸ்ட் இண்டீசில் நடக்கும் கரிபியன் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி விட்டு அந்த அனுபவத்துடன் ஐ.பி.எல். போட்டிக்கு வருகை தரும் போது நிச்சயம் மற்ற வீரர்களை காட்டிலும் அவர்களுக்கு சாதகமான அம்சமாக இருக்கும்’ என்றார்.

* கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் அட்லெட்டிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஆர்.பி.லெப்ஜிக் (ஜெர்மனி) அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதில் ஒரு கட்டத்தில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலை நீடித்த நிலையில் லெப்ஜிக் வீரர் டைலர் ஆடம்ஸ் 88-வது நிமிடத்தில் வெற்றிக்குரிய கோலை அடித்து தங்கள் அணியை முதல்முறையாக அரைஇறுதிக்கு அழைத்துச் சென்றார்.

* ஜெர்மனி கிரிக்கெட் அணி ஆஸ்திரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஜெர்மனி அணி நேற்று நடந்த 4-வது ஆட்டத்திலும் ஆஸ்திரியாவை பந்தாடியது. இதில் முதலில் பேட் செய்த ஜெர்மனி விக்கெட் இழப்பின்றி 198 ரன்கள் குவித்தது. ஜானெட் ரொனால்ட்ஸ் 68 ரன்களும், கிறிஸ்டினா காப் 101 ரன்களும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய ஆஸ்திரியா 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 61 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. ஜெர்மனி வேகப்பந்து வீச்சாளரும், கேப்டனுமான 33 வயதான அனுராதா டோட்டாபல்லாபுர் 3 ஓவர்களில் 2 மெய்டனுடன் ஒரு ரன் மட்டுமே வழங்கி 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் அவர் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியதும் அடங்கும். சர்வதேச பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீராங்கனை தொடர்ந்து 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தியிருப்பது இதுவே முதல்முறையாகும்.

* அமெரிக்காவின் லெக்சிங்டன் நகரில் நடந்து வரும் பெண்களுக்கான டாப் சீட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தனது அக்காவான வீனஸ் வில்லியம்சை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.


Next Story