பார்முலா1 கார்பந்தயத்தின் 6-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி இன்று நடக்கிறது


பார்முலா1 கார்பந்தயத்தின் 6-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 16 Aug 2020 1:09 AM GMT (Updated: 2020-08-16T06:39:30+05:30)

பார்முலா1 கார்பந்தயத்தின் 6-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி அங்குள்ள கேட்டலுன்யா ஓடுதளத்தில் இன்று நடக்கிறது.


* இந்திய இரட்டையர் பேட்மிண்டன் வீராங்கனை சிக்கிரெட்டிக்கும், அவரது உடல்தகுதி நிபுணர் டாக்டர் கிரன் சாலகுன்ட்லாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த வியாழக்கிழமை தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்துள்ளது. இதனால் ஐதராபாத்தில் நிறுத்தப்பட்ட பேட்மிண்டன் பயிற்சி முகாம் நாளை மீண்டும் தொடங்க உள்ளது.

* ஐ.பி.எல். கிரிக்கெட்டின் முதன்மை ஸ்பான்சர்ஷிப் உரிமத்தை பெறுவதற்காக டாடா குழுமம், அன்அகாடமி, டிரீம்11 ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளன. வருகிற 18-ந்தேதிக்குள் புதிய ஸ்பான்சர் யார் என்பது தெரிய வரும்.

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற வாய்ப்புள்ள இந்திய நீச்சல் வீரர்கள் விர்தவால் காதே, ஸ்ரீஹரி நடராஜ், குஷாக்ரா ரவாத் ஆகிய 3 பேரும் பயிற்சியாளர் ஏ.சி.ஜெயராஜனுடன் துபாய்க்கு சென்று அங்குள்ள நீச்சல் அகாடமியில் 2 மாதம் பயிற்சி மேற்கொள்ள இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) அனுமதி அளித்துள்ளது.

* இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. மழை பாதிப்புக்கு மத்தியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 2-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது நாளான நேற்றைய தினம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

* பார்முலா1 கார்பந்தயத்தின் 6-வது சுற்றான ஸ்பெயின் கிராண்ட்பிரி அங்குள்ள கேட்டலுன்யா ஓடுதளத்தில் இன்று நடக்கிறது. பந்தய தூரம் 307.104 கிலோமீட்டர் ஆகும். முதல் 5 சுற்றில் 3-ல் வெற்றியை ருசித்த நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் இங்கும் வாகை சூடுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. நேற்று நடந்த தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்த ஹாமில்டனின் கார் இன்றைய ரேசில் முதல் வரிசையில் இருந்து புறப்படும். இந்திய நேரப்படி மாலை 6.40 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

* கேல்ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் ஆகிய விளையாட்டு விருதுகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக், முன்னாள் குத்துச்சண்டை வீரர் தமிழகத்தை சேர்ந்த தேவராஜன் உள்பட 12 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்காக இந்த கமிட்டியினர் வருகிற 17, 18-ந்தேதிகளில் டெல்லியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆலோசிக்கிறார்கள்.


Next Story