சாக்‌ஷி மாலிக், மீராபாய் சானுக்கு அர்ஜூனா விருது நிராகரிப்பு - ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா உறுதி


சாக்‌ஷி மாலிக், மீராபாய் சானுக்கு அர்ஜூனா விருது நிராகரிப்பு - ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா உறுதி
x
தினத்தந்தி 22 Aug 2020 12:58 AM GMT (Updated: 22 Aug 2020 12:58 AM GMT)

அர்ஜூனா விருதுக்கு தேர்வு குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சாக்‌ஷி மாலிக், மீராபாய் சானு ஆகியோரின் பெயர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் நிராகரித்தது. ரோகித் சர்மா, தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் தேசிய விளையாட்டு விருதுகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுக்கு தகுதி படைத்தவர்களை ஓய்வு பெற்ற நீதிபதி முகுந்தம் சர்மா தலைமையிலான 12 பேர் கொண்ட தேர்வு கமிட்டி சில தினங்களுக்கு முன்பு தேர்வு செய்து மத்திய விளையாட்டு மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் ஒப்படைத்தது.

‘அர்ஜூனா’ விருதுக்கான பட்டியலில் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், 2017-ம் ஆண்டு உலக பளுதூக்குதலில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய வீராங்கனை மீராபாய் சானு உள்பட 29 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. ஏற்கனவே உயரிய கேல் ரத்னா விருதை பெற்று இருக்கும் இந்த இருவரின் தேர்வு விஷயத்தில் மத்திய விளையாட்டு மந்திரி இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்த சாக்‌ஷி மாலிக், மீராபாய் சானு ஆகிய இருவரின் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று நிராகரித்தது. மற்றபடி எல்லா விருதுகளுக்கும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை அப்படியே மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இதன்படி மிக உயரிய ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதை இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரர் மாரியப்பன், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஆகியோர் பெறுகிறார்கள். கேல் ரத்னா விருதை ஒரே ஆண்டில் 5 பேர் அறுவடை செய்வது இதுவே முதல்முறையாகும்.

இதேபோல் அர்ஜூனா விருதை அதானு தாஸ் (வில்வித்தை), டுட்டீ சந்த் (தடகளம்), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி (இருவரும் பேட்மிண்டன்), விகேஷ் பிகுவான்ஷி (கூடைப்பந்து), மனிஷ் கவுசிக், லவ்லினா போர்கோஹைன் (இருவரும் குத்துச்சண்டை), இஷாந்த் ஷர்மா, தீப்தி ஷர்மா (இருவரும் கிரிக்கெட்), சவாந்த் அஜய் ஆனந்த் (குதிரையேற்றம்), சந்தேஷ் ஜின்கான் (கால்பந்து), அதிதி அசோக் (கோல்ப்), ஆகாஷ்தீப் சிங், தீபிகா (இருவரும் ஆக்கி), தீபக் (கபடி), காலே சரிகா சுதாகர் (கோ-கோ), தத்து பாபன் போகனல் (துடுப்பு படகு), மானு பாகெர், சவுரப் சவுத்ரி (இருவரும் துப்பாக்கி சுடுதல்), மாதுரிகா பத்கர் (டேபிள் டென்னிஸ்), திவிஜ் சரண் (டென்னிஸ்), ஷிவ கேசவன் (குளிர்கால விளையாட்டு), திவ்யா காக்ரன், ராகுல் அவாரே (இருவரும் மல்யுத்தம்), சுயாஷ் நாராயண் ஜாதவ் (பாரா நீச்சல்), சந்தீப் (பாரா தடகளம்), மனிஷ் நார்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்) ஆகியோர் தட்டிச் செல்கிறார்கள்.

சிறந்த வீரர்களை உருவாக்கிய பயிற்சியாளர்களுக்கான ‘துரோணாச்சார்யா’ (வழக்கமான பிரிவு, வாழ்நாள் பிரிவு) விருது ஜூட் பெலிக்ஸ் (ஆக்கி), ஜஸ்பால் ராணா (துப்பாக்கி சுடுதல்) உள்பட 13 பேருக்கும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்காற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ‘தயான் சந்த்’ விருது அஜித் சிங் (ஆக்கி), நந்தன் பால் (டென்னிஸ்) உள்பட 15 பேருக்கும் கிட்டுகிறது.

தேசிய விருது வழங்கும் விழா வருகிற 29-ந் தேதி ஆன்லைனில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story