ரஷிய பார்முலா1 கார்பந்தயத்தில் போட்டாஸ் முதலிடம்


ரஷிய பார்முலா1 கார்பந்தயத்தில் போட்டாஸ் முதலிடம்
x
தினத்தந்தி 27 Sep 2020 11:15 PM GMT (Updated: 27 Sep 2020 8:41 PM GMT)

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

சோச்சி,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 10-வது சுற்றான ரஷியன் கிராண்ட்பிரி அங்குள்ள சோச்சி ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 309.745 கிலோமீட்டர் ஆகும். வழக்கம் போல் 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் இலக்கை நோக்கி காரில் சீறிப்பாய்ந்தனர். இதில் தகுதி சுற்றில் முதலிடத்தை பிடித்த 6 முறை சாம்பியனான லீலீஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) முதல்வரிசையில் இருந்து புறப்பட்டு ஆதிக்கம் செலுத்தினார். இதற்கிடையே, பயிற்சி தொடக்கத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக ஹாமில்டன் மீது விசாரணை நடத்தப்பட்டு, அவருக்கு 5 வினாடி விதம் இரண்டு முறை பெனால்டி விதிக்கப்பபட்டது. இதனால் முன்னணியில் இருந்த அவர் தடாலடியாக 11-வது இடத்துக்கு பின்தங்க நேரிட்டது. இருப்பினும் காரை அதிவேகத்தில் செலுத்தி எப்படியோ டாப்-3க்குள் நுழைந்தார்.

பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 1 மணி 34 நிமிடம் 00.364 வினாடிகளில் இலக்கை கடந்து வெற்றி பெற்று 26 புள்ளிகளை தட்டிச் சென்றார். அவரை விட 7.729 வினாடி பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார். 3-வது இடத்தை பெற்ற ஹாமில்டனுக்கு 15 புள்ளிகள் கிடைத்தது.

இதுவரை நடந்துள்ள 10 சுற்று முடிவில் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான வாய்ப்பில் ஹாமில்டன் 205 புள்ளிகளுடன் முதலிடத்திலும், போட்டாஸ் 161 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். 11-வது சுற்று போட்டி வருகிற 11-ந்தேதி ஜெர்மனியில் நடக்கிறது.

Next Story