இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரஹானே நேற்று வெளியிட்ட டுவிட்டர் - துளிகள்


இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரஹானே நேற்று வெளியிட்ட டுவிட்டர் - துளிகள்
x
தினத்தந்தி 30 Dec 2020 11:08 PM GMT (Updated: 30 Dec 2020 11:08 PM GMT)

கிரிக்கெட்டை பின்பற்றும் இத்தகைய இந்திய ரசிகர்களின் முகத்தில் புன்னகையை கொண்டு வருவதே ஒரு அணியாக எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகும்.

* இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரஹானே நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘எங்களுக்கும் அன்பும், ஆதரவும் அளித்து வரும் அனைவருக்கும் நன்றி கடன்பட்டுள்ளேன். கிரிக்கெட்டை பின்பற்றும் இத்தகைய இந்திய ரசிகர்களின் முகத்தில் புன்னகையை கொண்டு வருவதே ஒரு அணியாக எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகும். உங்களது ஆதரவையும், வாழ்த்துகளையும் நாங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். அடுத்த இரு டெஸ்ட் போட்டிக்காக கடினமாக உழைப்போம்’ என்று குறிப்பிட்டார்.

* 11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை தோற்கடித்தது. 86-வது நிமிடம் வரை 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த கோவா அணி கடைசி 3 நிமிடங்களில் 2 கோல் அடித்து 4-வது வெற்றியை ருசித்தது. இஷான் பன்டிட்டா, இகோர் அங்குலோ ஆகியோர் இவ்விரு கோல்களையும் அடித்தனர். போட்டியில் இன்றும், நாளையும் ஓய்வு நாளாகும். 2-ந்தேதி நடக்கும் அடுத்த லீக்கில் மும்பை சிட்டி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன.

* இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அளித்த ஒரு பேட்டியில், ‘மயங்க் அகர்வால் மனஉறுதி மிக்க ஒரு ஆட்டக்காரர். இதை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக களத்தில் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு பேட்ஸ்மேன்களுக்கும் சறுக்கல் ஏற்படத்தான் செய்யும். எனவே அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் இறங்க வேண்டும் என்பது எனது கருத்து. சுப்மான் கில்லை மிடில் வரிசைக்கு மாற்ற வேண்டும். அதற்கு பதிலாக ஹனுமா விஹாரியை நீக்கலாம்’ என்றார்.* சயத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 10-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான கேரளா அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரளா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், ராபின் உத்தப்பா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். சூதாட்ட சர்ச்சையில் சிக்கி கைதானார். பிறகு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் அவரது தடை காலம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உள்ளூர் போட்டியில் கால்பதிக்கிறார்.

* “தற்போதைய ஆஸ்திரேலிய அணியை பார்க்கும் போது அவர்களது பேட்டிங் வரிசை நிலையாக இருப்பது போல் தெரியவில்லை. சில வீரர்கள் தங்களது இடத்தை உறுதி செய்ய விளையாடுகிறார்கள்” என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.


Next Story