உலக பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் - சிந்து சாதிப்பாரா?
உலக டூர் இறுதிசுற்று சர்வதேச பேட்மிண்டன் போட்டி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் இன்று தொடங்குகிறது.
பாங்காக்,
உலக டூர் இறுதிசுற்று சர்வதேச பேட்மிண்டன் போட்டி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் இன்று தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் தரவரிசையில் டாப்-8 இடங்களை வகிப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதன்படி தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து இந்த போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளனர். சிந்துவுக்கு கடினமான பிரிவு (பி) அமைந்துள்ளது. ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங் (சீனதைபே), முன்னாள் உலக சாம்பியனான உள்ளூர் நட்சத்திரம் ராட்சனோக் இன்டானோன், போர்ன்பவீ சோச்சுவோங் (தாய்லாந்து) ஆகியோர் சிந்துவுடன் அங்கம் வகிக்கிறார்கள். ‘ஏ’ பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரின்(ஸ்பெயின்), அன்சி யங் (தென்கொரியா), மிட்செல் லி (கனடா), எவ்ஜினியா கோசெட்ஸ்கயா (ரஷியா) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிப்போர் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.
சிந்து தனது தொடக்க ஆட்டத்தில் தாய் ஜூ யிங்கை இன்று எதிர்கொள்கிறார். இவர்கள் இருவரும் இதுவரை 17 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி அதில் 5-ல் சிந்துவும், 12-ல் தாய் ஜூ யிங்கும் வெற்றி கண்டுள்ளனர். தனது தாய்லாந்து பயணத்தில் முதல் இரு தொடர்களில் தோல்வியை தழுவிய சிந்து இந்த போட்டியிலாவது முத்திரை பதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீகாந்தும் தகுதி பெற்றிருக்கிறார். அவர் தற்போது தரவரிசையில் 14-வது இடம் வகித்தாலும், இது கடந்த ஆண்டு நடக்க வேண்டிய போட்டி என்பதால் அந்த சமயத்தில் தரவரிசையில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் ஸ்ரீகாந்த் வாய்ப்பு பெற்றுள்ளார். ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ள ஸ்ரீகாந்துடன், அன்டர்ஸ் ஆன்டோன்சென் (டென்மார்க்), வாங் ஜூ வெய் (சீனதைபே), நிகா லாங் அங்குஸ் (ஹாங்காங்) ஆகியோரும் இருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தனது முதல் சவாலை 3-ம் நிலை வீரர் ஆன்டோன்செனுடன் இன்று தொடங்குகிறார்.
மொத்தம் ரூ.11 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.88 லட்சம் பரிசுத் தொகையாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story