பிற விளையாட்டு

உலக கோப்பை செஸ் போட்டிக்கு தமிழக வீரர் இனியன் தேர்வு + "||" + Tamil Nadu player Enian selected for World Cup Chess Tournament

உலக கோப்பை செஸ் போட்டிக்கு தமிழக வீரர் இனியன் தேர்வு

உலக கோப்பை செஸ் போட்டிக்கு தமிழக வீரர் இனியன் தேர்வு
உலக கோப்பை செஸ் போட்டி ரஷியாவில் உள்ள சோச்சி நகரில் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந் தேதி முதல் ஆகஸ்டு 3-ந் தேதி வரை நடக்கிறது.

இதற்கு ஆசிய செஸ் போட்டியில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கொரோனா பரவல் காரணமாக ஆசிய செஸ் போட்டியில் இந்திய வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை. இதனால் உலக செஸ் போட்டியில் இந்தியாவில் இருந்து ஒருவர் மட்டும் பங்கேற்க இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்க அகில இந்திய செஸ் சம்மேளனம் தங்களுடைய வீரர்களுக்கு போட்டியை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து உலக கோப்பை போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் செஸ் வீரரை தேர்வு செய்ய அகில இந்திய செஸ் சம்மேளனம் சார்பில் ஆன்லைன் மூலம் செஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் 8 கிராண்ட்மாஸ்டர்கள், 7 சர்வதேச மாஸ்டர்கள், 2 பிடே மாஸ்டர் என மொத்தம் 17 வீரர்கள் கலந்து கொண்டனர். 16 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஈரோட்டை சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் இனியன் 12 வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வியுடன் 12½ புள்ளிகள் குவித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதுடன், உலக கோப்பை செஸ் போட்டிக்கும் தேர்வானார்.