உலக கோப்பை வில்வித்தை: ஒரே நாளில் 3 தங்கம் வென்று தீபிகாகுமாரி அசத்தல்


உலக கோப்பை வில்வித்தை: ஒரே நாளில் 3 தங்கம் வென்று தீபிகாகுமாரி அசத்தல்
x

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் ஒரே நாளில் 3 தங்கம் வென்று தீபிகாகுமாரி கவனத்தை ஈர்த்துள்ளார்.

பாரீஸ், 

உலக கோப்பை வில்வித்தை போட்டி (3-ம் நிலை) பாரீஸ் நகரில் நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான ரீகர்வ் அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமாலிகா பாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-1 என்ற செட் கணக்கில் மெக்சிகோவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இதே 3 பேர் கொண்ட இந்திய அணி தான் கடந்த வாரம் உலக கோப்பை முதல்நிலை இறுதி ஆட்டத்தில் கொலம்பியாவுக்கு எதிராக தோற்று ஒலிம்பிக் வாய்ப்பை கோட்டை விட்டது குறிப்பிடத்தக்கது.

கலப்பு பிரிவில் இந்தியாவின் நட்சத்திர தம்பதியான அதானு தாஸ்- தீபிகா குமாரி ஆகியோர் 5-3 என்ற கணக்கில் நெதர்லாந்தின் செப் வான் டென் பெர்க்-கேப்ரியலா கூட்டணியை சாய்த்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினர். தொடக்கத்தில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கிய அதானு-தீபிகா ஜோடியினர் அதன் பிறகு சரிவில் இருந்து மீண்டு மகுடம் சூடினர்.

தொடர்ந்து பெண்களுக்கான ஒற்றையர் ரீகர்வ் பிரிவிலும் தீபிகா குமாரி துல்லியமாக அம்புகளை எய்து கலக்கினார். இதன் இறுதி ஆட்டத்தில் தீபிகா குமாரி 6-0 என்ற செட் கணக்கில் ரஷியாவின் எலினா ஒசிபோவாவை துவம்சம் செய்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தீபிகா குமாரி ஒரே நாளில் 3 தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கி கவனத்தை ஈர்த்துள்ளார்.

அடுத்த மாதம் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை ஒற்றையர் பிரிவுக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்ட 27 வயதான தீபிகா குமாரி கூறுகையில், ‘எனது செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் தொடர்ந்து இதே போன்று செயல்பட வேண்டும். ஆட்டத்திறனில் முன்னேற்றம் காண விரும்புகிறேன். ஏனெனில் அடுத்து மிக முக்கியமான போட்டிகள் வருகிறது. தொடர்ந்து எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன். ஒலிம்பிக்கில் இந்திய வில்வித்தை வீரர், வீராங்கனைகள் யாரும் இதுவரை பதக்கம் வென்றதில்லை. எனவே ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது முக்கியம்’ என்றார்.

Next Story