பாராஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்; தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்துகிறார்


பாராஒலிம்பிக் போட்டி இன்று தொடக்கம்; தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்துகிறார்
x
தினத்தந்தி 24 Aug 2021 4:44 AM GMT (Updated: 24 Aug 2021 4:44 AM GMT)

163 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் பாராஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று தொடங்குகிறது. தொடக்க விழா அணிவகுப்பில் தமிழக வீரர் மாரியப்பன் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்.

பாராஒலிம்பிக் போட்டி
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்ததும் பாராஒலிம்பிக் போட்டி நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை நடந்தது.இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செப்டம்பர் 5-ந் தேதி வரை நடக்கிறது.

இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்ட இருக்கிறார்கள். வீரர்களின் உடல் பாதிப்புக்கு தகுந்தபடி வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், சைக்கிளிங், குதிரையேற்றம், கால்பந்து (5 பேர் அடங்கிய அணி), துப்பாக்கி சுடுதல், வலுதூக்குதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, தேக்வாண்டோ உள்பட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெறுகிறது.

இந்திய அணியில் 54 வீரர், வீராங்கனைகள்
டோக்கியோவில் அரங்கேறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்கிறது. இவ்வளவு அதிக வீரர்களை கொண்ட இந்திய அணி கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், வலுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், தேக்வாண்டோ, கனோயிங் (சிறிய வகை துடுப்புபடகு) ஆகிய 9 போட்டிகளில் இந்தியா கலந்து கொள்கிறது. பாராஒலிம்பிக் வரலாற்றில் இந்தியா இதுவரை 4 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்கள் வென்றுள்ளது. அதிகபட்சமாக கடந்த (2016) பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று இருந்தது. இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கம் வென்று சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்திய அணி தயாராகி இருக்கிறது. கடந்த (2016) பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தகுதி போட்டியில் 1.86 மீட்டர் உயரம் தாண்டி நல்ல பார்மில் இருக்கிறார். இதேபோல் ஈட்டி எறிதலில் 2004, 2016-ம் ஆண்டுகளில் தங்கப்பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியாவும் சிறந்த நிலையில் உள்ளார். இதனால் இருவரும் மீண்டும் பதக்கம் வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது. உலக சாதனையாளர்களான சுந்தர்சிங் குர்ஜார், அஜீத் சிங், சந்தீப் சவுத்ரி, நவ்தீப் சிங் (ஈட்டி எறிதல்) ஆகியோரும் தங்கள் பிரிவில் பதக்கம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இதுதவிர பேட்மிண்டன், வில்வித்தையிலும் இந்தியர்கள் சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாரியப்பன் கொடியேந்துகிறார்
தற்போது ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஒலிம்பிக் போட்டியை போல் பாராஒலிம்பிக் போட்டியையும் நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன.தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி சார்பில் 5 வீரர்கள், 6 அதிகாரிகள் என மொத்தம் 11 பேர் கலந்து கொள்கிறார்கள். இந்திய அணிக்கு தமிழக வீரர் மாரியப்பன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். அவரை தவிர வினோத் குமார் (வட்டு எறிதல்), தேக் சந்த் (ஈட்டி எறிதல்), ஜெய்தீப் குமார், சகினா காதுன் (வலுதூக்குதல்) ஆகிய வீரர், வீராங்கனைகள் அணிவகுக்கிறார்கள். டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் ஜப்பான் பேரரசர் நருஹிடோ கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Next Story