தமிழக வீரர் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டார்


தமிழக வீரர் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டார்
x
தினத்தந்தி 24 Aug 2021 9:25 PM GMT (Updated: 24 Aug 2021 9:25 PM GMT)

16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது.

டோக்கியோ, 

மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் தொடக்க விழாவில் கடந்த (2016) பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தில் உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி அணிவகுத்து செல்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அவருடன் வீரர்கள், அதிகாரிகள் உள்பட 11 பேர் அணிவகுத்து செல்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக கடந்த வாரமே மாரியப்பன் உள்பட இந்திய அணியினர் டோக்கியோ புறப்பட்டு சென்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடைசி நேரத்தில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி செல்லும் அரிய வாய்ப்பை 26 வயதான மாரியப்பன் இழந்து இருக்கிறார்.

டோக்கியோவுக்கு மாரியப்பன் உள்ளிட்ட இந்திய அணியினர் சென்ற விமானத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பயணியின் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்தவர் என்ற வகையில் மாரியப்பன், வட்டு எறிதல் வீரர் வினோத்குமார் உள்பட 6 இந்தியர்கள் விளையாட்டு கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

மாரியப்பனுக்கு கடந்த 6 நாட்கள் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தாலும் அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடக்க விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று பாராஒலிம்பிக் கமிட்டியினர் அறிவுறுத்தினர். கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் மறுஅறிவிப்பு வரும் வரை தனிமைப்படுத்துதலை கடைபிடிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் மாரியப்பன் பங்கேற்க முடியாவிட்டாலும் போட்டியில் கலந்து கொள்வதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.

தொடக்க விழாவில் மாரியப்பனுக்கு பதிலாக 2018-ம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கமும், அதே ஆண்டில் நடந்த உலக பாரா தடகள கிராண்ட்பிரி போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றவரான 37 வயது ஈட்டி எறிதல் வீரர் தேக் சந்த் தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார்.

Next Story