எனது ஈட்டியை பாகிஸ்தான் வீரர் பயன்படுத்தியதை வைத்து எனது பெயரை சர்ச்சையில் இழுக்காதீர் - நீரஜ்சோப்ரா வேண்டுகோள்


எனது ஈட்டியை பாகிஸ்தான் வீரர் பயன்படுத்தியதை வைத்து எனது பெயரை சர்ச்சையில் இழுக்காதீர் - நீரஜ்சோப்ரா வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Aug 2021 11:21 PM GMT (Updated: 26 Aug 2021 11:21 PM GMT)

தனது ஈட்டியை பாகிஸ்தான் வீரர் பயன்படுத்தியதை வைத்து தேவையில்லாத சர்ச்சையை கிளப்ப வேண்டாம் என்று இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

சமீபத்தில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டியை வீசி தங்கப்பதக்கத்தை கைப்பற்றி சரித்திரம் படைத்தார். 121 ஆண்டு கால இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் கிட்டிய முதல் தங்கப்பதக்கம் இது தான். இதனால் பாராட்டுகளால் திகைத்து போன நீரஜ் சோப்ராவுக்கு ரூ.15 கோடி வரை பரிசுமழை கொட்டியது.

23 வயதான நீரஜ் சோப்ரா சில தினங்களுக்கு முன்பு அளித்த ஒரு பேட்டியில், ‘இறுதி சுற்றில் ஈட்டி எறிய தயாராகிக்கொண்டிருந்த போது திடீரென எனது ஈட்டியை காணவில்லை. அங்கும், இங்கும் தேடிய போது பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் (5-வது இடம் பிடித்தார்) எனது ஈட்டியுடன் சென்று கொண்டிருப்பதை பார்த்தேன். அவரிடம் நான், ‘இது என்னுடைய ஈட்டி. அதை கொடுங்க. அதை கொண்டு தான் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினேன். அவரும் திருப்பி தந்தார். இதனால் தான் முதல் வாய்ப்பில் நான் கொஞ்சம் அவசரகதியில் ஈட்டி எறிந்ததை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்’ என்று கூறினார்.

இதை வைத்து பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமுக்கு எதிராக சமூக வலைதளங்களில் சில பரபரப்பான பதிவுகள் வெளியாகின. இந்திய வீரரின் கவனத்தை திசைதிருப்பவே அவர் உள்நோக்கத்துடன் இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் மீதான விமர்சனங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள நீரஜ் சோப்ரா நேற்று தனது டுவிட்டர் பதிவில், ‘உங்களுடைய சுயலாபம் மற்றும் தவறான பிரசாரத்துக்காக தயவு செய்து எனது பேட்டியை பயன்படுத்த வேண்டாம் என்று ஒவ்வொருவரையும் கேட்டுக் கொள்கிறேன். விளையாட்டு, எங்களுக்கு ஒற்றுமையை கற்றுக்கொடுக்கிறது. என்னுடைய பேட்டியை மையமாக வைத்து சிலரிடம் இருந்து வரும் கருத்துகள் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்ட நீரஜ் சோப்ரா அதில், ‘போட்டிக்கு தயாராவதற்கு அர்ஷத் நதீம் எனது ஈட்டியை பயன்படுத்தியதில் எந்த தவறும் இல்லை. களத்திற்கு வரும் போது தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் ஈட்டி அனைத்தையும் ஒரே இடத்திலேயே வைத்திருப்போம். அதை யாரும் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். அது தான் விதிமுறை. நதீம் எனது ஈட்டியை வைத்து தயாராகி கொண்டு இருந்தார். நான் கேட்டதும் தந்து விட்டார் அவ்வளவு தான். எனது பெயரை வைத்து தற்போது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்குவது வேதனை அளிக்கிறது. தயவு செய்து இந்த விஷயத்தை விவகாரமாக்காதீர். ஈட்டி எறிதல் வீரர்களாகிய எங்களிடையே நல்ல நட்புறவு உள்ளது. ஒருவருக்கொருவர் சகஜமாக பேசிக் கொள்கிறோம்’ என்றார்.

Next Story