பாராஒலிம்பிக் பேட்மிண்டண்: இந்திய வீரர் பிரமோத் அரைஇறுதிக்கு தகுதி


பாராஒலிம்பிக் பேட்மிண்டண்: இந்திய வீரர் பிரமோத் அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 2 Sep 2021 10:58 PM GMT (Updated: 2 Sep 2021 10:58 PM GMT)

பாராஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் அரைஇறுதிக்கு முன்னேறி பதக்கத்தை நெருங்கினார்.

டோக்கியோ, 

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. போட்டியின் 10-வது நாளான நேற்று இந்தியாவுக்கு பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை.

ஆண்களுக்கான பேட்மிண்டன் ஒற்றையரில் எஸ்.எல்.3 பிரிவில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் (குரூப்ஏ) நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் 21-12, 21-9 என்ற நேர் செட்டில் உக்ரைனின் ஒலக்சாண்டர் சிர்கோவை பந்தாடினார். தனது பிரிவில் 2-வது வெற்றியை சுவைத்த உலக சாம்பியனான பிரமோத் பகத் இதன் மூலம் அரைஇறுதிக்கு முன்னேறினார். இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அவருக்கு பதக்கம் உறுதியாகி விடும். 33 வயதான பிரமோத் இடது கால் பாதிப்புக்குள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்மிண்டன் எஸ்.எல்.4 பிரிவில் இந்திய வீரர் சுஹாஸ் யதிராஜ் தனது தொடக்க ஆட்டத்தில் (ஏ குருப்) 21-9, 21-3 என்ற நேர் செட்டில் ஜெர்மனியின் ஜன் நிக்லஸ் போட்டை தோற்கடித்தார். தனது குரூப்பில் மீதமுள்ள இரு வீரர்களையும் யதிராஜ் இன்று சந்திக்கிறார். இதன் ‘பி’ பிரிவில் இந்தியாவின் தருண் தில்லான் 21-7, 21-13 என்ற நேர் செட்டில் சிரிபோங் டீமரோமை (தாய்லாந்து) வீழ்த்தினார். அவரும் தனது பிரிவில் இன்று மேலும் இரு லீக்கில் விளையாட உள்ளார். இவற்றில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் அரைஇறுதிசுற்றை எட்டிவிடலாம்.

பெண்கள் ஒற்றையர் எஸ்.யூ.5 பிரிவில் இந்திய வீராங்கனை பலாக் கோலி (ஏ குரூப்) 21-12, 21-18 என்ற நேர் செட்டில் உக்ரைனின் ஸிரா பக்லரை தோற்கடித்தார். ஒரு கையை இழந்தவரான பலாக் கோலி இதுவரை ஒரு வெற்றி, ஒரு தோல்வி கண்டுள்ளார். மற்றொரு ஆட்டத்தின் முடிவை பொறுத்து அவர் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவாரா என்பது தெரியவரும்.




 
                               இந்திய வீராங்கனை பலாக் கோலி பந்தை திருப்பி அடிக்கிறார்.



8 வீரர்கள் இடையிலான ஆண்கள் குண்டு எறிதலின் இறுதி சுற்றில் (எப்.35 பிரிவு) இந்திய வீரர் அரவிந்த் மாலிக்குக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதிகபட்சமாக 13.48 மீட்டர் தூரம் குண்டு எறிந்த அவர் 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

துப்பாக்கி சுடுதலில் இருபாலரும் கலந்து கொள்ளும் கலப்பு 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ராகுல் ஜாஹர் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தார். சீனாவின் ஸியாங் ஹூவாங் 27 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

பெண்களுக்கான துடுப்பு படகு போட்டியில் (கனோவ் ஸ்பிரிண்ட் ) இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் அரைஇறுதிக்கு தகுதி பெற்று நம்பிக்கை அளித்துள்ளார்.

Next Story