தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி - அசாம் வீரர் ஷிவதபா சாம்பியன்


தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி - அசாம் வீரர் ஷிவதபா சாம்பியன்
x
தினத்தந்தி 21 Sep 2021 8:20 PM GMT (Updated: 2021-09-22T01:50:57+05:30)

தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அசாம் வீரர் ஷிவதபா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பெல்லாரி,

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் ஆண்களுக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடந்த 63 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான அசாம் வீரர் ஷிவதபா 5-0 என்ற கணக்கில் சர்வீசஸ் வீரர் தல்வீர் சிங் தோமரை தோற்கடித்து மீண்டும் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார். 92 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், ஆசிய சாம்பியனான சர்வீசஸ் வீரர் சஞ்சீத் 5-0 என்ற கணக்கில் அரியானாவின் நவீன் குமாரை வீழ்த்தி ‘சாம்பியன்’ பட்டத்தை சொந்தமாக்கினார். 

57 கிலோ எடைப்பிரிவில் டெல்லி வீரர் ரோகித் மோர் 5-0 என்ற கணக்கில் நடப்பு சாம்பியன் ஹூசாமுதீனுக்கு அதிர்ச்சி அளித்து ‘சாம்பியன்’ பட்டத்தை தனதாக்கினார். சர்வீசஸ் அணி மொத்தம் 12 பதக்கத்துடன் (8 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம்) முதலிடத்தை பிடித்தது.

இந்த போட்டியில் மகுடம் சூடிய வீரர்கள் அனைவரும் செர்பியாவில் அக்டோபர் 24-ந் தேதி முதல் நவம்பர் 6-ந் தேதி வரை நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுவார்கள். இதில் ஷிவதபா தவிர மற்றவர்கள் முதல்முறையாக உலக சாம்பியன்ஷிப்பில் களம் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story