புரோ கபடி லீக் தொடர் டிசம்பரில் தொடக்கம்: ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது


புரோ கபடி லீக் தொடர் டிசம்பரில் தொடக்கம்: ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது
x
தினத்தந்தி 5 Oct 2021 10:13 PM GMT (Updated: 5 Oct 2021 10:13 PM GMT)

புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் டிசம்பர் 22-ந் தேதி தொடங்கி நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழு அறிவித்துள்ளது.

மும்பை, 

8-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் டிசம்பர் 22-ந் தேதி தொடங்கி நடைபெறும் என்று போட்டி அமைப்பு குழு அறிவித்துள்ளது. இதில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்ஸ், 3 முறை சாம்பியன் பாட்னா பைரட்ஸ், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பெங்களூரு புல்ஸ் உள்பட 12 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. வழக்கமாக இந்த போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெறும். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த முறை கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு (பயோ-பபுள்) நடைமுறைகளை பின்பற்றி ஒரே இடத்தில் (பெங்களூரு) நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்தது. இதில் ஒவ்வொரு அணி நிர்வாகமும், தங்கள் அணியின் வலிமையை மேம்படுத்த புதிய வீரர்களை வசப்படுத்தினார்கள். புதிய பொலிவுடன் அணிகள் களம் காண இருப்பதால் இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. கொரோனா அச்சத்தால் கடந்த ஆண்டு இந்த போட்டி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story