பார்முலா 1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி


பார்முலா 1 கார் பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி
x
தினத்தந்தி 15 Nov 2021 7:23 PM GMT (Updated: 2021-11-16T00:53:47+05:30)

பார்முலா 1 கார் பந்தயத்தின் 19-வது சுற்று பிரேசில் கிராண்ட்பிரி பந்தயம் சாபாலோ ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

சாபாலோ, 

இந்த ஆண்டுக்கான ‘பார்முலா1’ கார் பந்தயம் 22 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 19-வது சுற்றான பிரேசில் கிராண்ட்பிரி பந்தயம் சாபாலோ ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தனர். 

305.909 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த பந்தயத்தில் நடப்பு சாம்பியனான மெர்சிடஸ் அணியைச் சேர்ந்த இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 1 மணி 32 நிமிடம் 22.851 வினாடியில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்து 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். அவரை விட 10.496 வினாடி பின்தங்கிய ரெட்புல் அணியைச் சேர்ந்த நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் 2-வதாக வந்து 18 புள்ளிகளை தனதாக்கினார்.

இதுவரை நடந்துள்ள 19 சுற்று முடிவில் வெர்ஸ்டப்பென் 332.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஹாமில்டன் 318.5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். அடுத்த சுற்றான கத்தார் கிராண்ட்பிரி பந்தயம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது.

Next Story