புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்-பாட்னா ஆட்டம் ‘டை’


புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ்-பாட்னா ஆட்டம் ‘டை’
x
தினத்தந்தி 6 Jan 2022 9:07 PM GMT (Updated: 6 Jan 2022 9:07 PM GMT)

நேற்றிரவு நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்சுடன் மோதியது.

பெங்களூரு, 

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, முன்னாள் சாம்பியன் பாட்னா பைரட்சுடன் மோதியது. 

முதல் பாதியில் தடுமாறிய தலைவாஸ் 12-18 என்ற கணக்கில் பின்தங்கியது. பிற்பாதியில் பதிலடி கொடுத்த தலைவாஸ் வீரர்கள் எதிரணியை ஆல்-அவுட் செய்ததுடன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் முன்னிலைக்கும் வந்தனர். பிறகு 29-29, 30-30 என்று சமநிலையை எட்டியது. 

ஆனால் கடைசி இரு ரைடுகளில் இரு அணி வீரர்களும் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் வெறுங்கையுடன் திரும்பியதால் ஆட்டம் 30-30 என்ற புள்ளி கணக்கில் சமனில் (டை) முடிந்தது. இந்த சீசனில் டையில் முடிந்த 9-வது ஆட்டம் இதுவாகும். தலைவாஸ் தரப்பில் அதிகபட்சமாக அஜிங்யா பவார் 12 புள்ளிகள் சேர்த்தார். 7-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றி, ஒரு தோல்வி, 4 டை என்று 22 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணி 38-31 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை தோற்கடித்து 5-வது வெற்றியை சுவைத்தது.

இன்றைய லீக் ஆட்டங்களில் பெங்கால் வாரியர்ஸ்- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 7.30 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- புனேரி பால்டன் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story