ஆசிய தடகள போட்டியில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்


ஆசிய தடகள போட்டியில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 தங்கப்பதக்கம்
x

ஆசிய தடகள போட்டியில் நேற்று ஒரேநாளில் இந்தியா 3 தங்கப்பதக்கங்களை வென்றது.

பாங்காக்,

ஆசிய தடகளம்

24-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தின் இறுதி சுற்று மழையால் ஈரப்பதமாக இருந்த ஓடுதளத்தில் அரங்கேறியது. இதில் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி 13.09 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். விசாகப்பட்டினத்தை சேர்ந்த 23 வயதான ஜோதி பெரிய சர்வதேச போட்டியில் தங்கப்பதக்கத்தை உச்சி முகர்வது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டி தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கமாக இது அமைந்தது.

ஜப்பானின் தெரடா அசுகா (13.13 வினாடி) வெள்ளிப்பதக்கமும், அயோகி மசுமி (13.26 வினாடி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். மற்றொரு இந்திய வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த நித்யா ராம்ராஜ் (13.55 வினாடி) 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

அஜய்குமார் அசத்தல்

ஆண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் அஜய்குமார் சரோஜ் 3 நிமிடம் 41.51 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த 26 வயதான அஜய்குமார் இந்த போட்டி தொடரில் தொடர்ச்சியாக கைப்பற்றிய 3-வது பதக்கம் இதுவாகும். 2017-ம் ஆண்டு தங்கப்பதக்கமும், 2019-ம் ஆண்டு வெள்ளிப்பதக்கமும் வென்று இருந்தார். இதில் ஜப்பானின் யுசுகி தகஹாஷி (3 நிமிடம் 42.04 வினாடி) வெள்ளிப்பதக்கமும், சீனாவின் லூ டெஸ்ஹூ (3 நிமிடம் 42.30 வினாடி) வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர்.

இதேபோல் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) பந்தயத்தில் காமன்வெல்த் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்திய வீரர் அப்துல்லா அபூபக்கர் தனது 4-வது முயற்சியில் 16.92 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். கேரளாவை சேர்ந்த 27 வயதான அபூபக்கருக்கு ஆசிய போட்டியில் கிடைத்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். ஜப்பானின் இகிஹதா ஹிகாரு (16.73 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், தென்கொரியாவின் ஜாங்வோ கிம் (16.59 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

3-வது இடத்தில் இந்தியா

பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ஜஸ்வர்யா மிஸ்ரா 53.07 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து வெண்கலப்பதக்கத்தை வென்றார். ஆண்களுக்கான டெக்கத்லான் பந்தயத்தில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கருக்கு (7,527 புள்ளி) வெண்கலம் கிட்டியது.

16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 2-வது நாள் பந்தயங்கள் முடிவில் இந்தியா 3 தங்கம், 3 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. ஜப்பான் 7 தங்கம், 8 வெள்ளி, 3 வெண்கலம் என 18 பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 2-வது இடத்திலும் இருக்கின்றன.


Next Story