'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி வெற்றி


ஏ டிவிசன் லீக் கைப்பந்து: தொடக்க ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி வெற்றி
x

நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி, தமிழ்நாடு போலீஸ் அணியை தோற்கடித்தது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் எஸ்.என்.ஜெ. குழுமம் ஆதரவுடன் மாவட்ட 'ஏ' டிவிசன் லீக் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. மறைந்த ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவாக நடத்தப்படும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சுங்க இலாகா, தமிழ்நாடு போலீஸ் உள்பட 8 அணிகள் களம் காணுகின்றன. அவை ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகின்றன. லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும்.

நேற்று நடந்த தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு கைப்பந்து சங்க சேர்மன் எஸ்.என்.ஜெயமுருகன் தலைமை தாங்கினார். வருமானவரித்துறை முதன்மை கமிஷனர் செல்வகணேஷ், ஜி.எஸ்.டி.- சுங்க இலாகா கூடுதல் கமிஷனர் கோவிந்தராஜ், கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் அர்ஜூன் துரை, ஆச்சி குரூப் சேர்மன் பத்மசிங் ஐசக், இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் அதிகாரி சுரேஷ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டியை தொடங்கி வைத்தனர். கைப்பந்து சங்க நிர்வாகிகள் ஆர்.வி.எம்.ஏ.ராஜன், வெங்கடேஷ்வரன், ஜெகதீசன், தினகரன், பழனியப்பன், ஸ்ரீகேசவன் உள்பட பலர் நிகழச்சியில் கலந்து கொண்டனர்.

தொடக்க ஆட்டத்தில் ஐ.சி.எப். அணி 26-24, 25-23, 25-11 என்ற நேர் செட்டில் தமிழ்நாடு போலீஸ் அணியை தோற்கடித்தது. மற்றொரு திரில்லிங்கான ஆட்டத்தில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி 25-22, 25-23, 18-25, 13-25, 27-25 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கியை வென்றது. வருகிற 22-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.


Next Story