சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும்; மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத் பேட்டி


சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும்; மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத் பேட்டி
x

சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என வளர்ந்து வரும் மல்யுத்த வீராங்கனை சங்கீதா போகத் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் விவகாரத்தில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கூறும்போது, புதிய நாடாளுமன்ற கட்டிடம் முன் வரும் 28-ந்தேதி அமைதியாக மகளிர் கூட்டம் ஒன்றை நடத்த மல்யுத்த வீராங்கனைகள் முடிவு செய்து உள்ளோம். இதில், அனைத்து முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பார்கள்.

எனினும், எங்களுக்கு ஆதரவு தரும் பெண்களால் முதன்மையாக இது நடத்தப்படும் என கூறினார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் முன் நடைபெற கூடிய மகா பஞ்சாயத்து கூட்டம் ஆனது, அமைதியான போராட்டத்தில் ஒன்றாக இருக்கும் என கூறினார்.

இவர்களது போராட்டத்திற்கு, சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற விவசாயிகள் சங்கம் உள்பட அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். போராட்டத்திற்கு அரியானா உள்துறை மற்றும் சுகாதார மந்திரியான அனில் விஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் கூறும்போது, பாரபட்சமின்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.

இந்நிலையில், நார்கோ சோதனை, பாலிகிராப் சோதனை அல்லது உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார் என பிரிஜ் பூஷண் சமீபத்தில் கூறினார். இதன்பின்னர், நார்கோ சோதனைக்கு தயாராகவே இருக்கிறோம் என பஜ்ரங் பூனியாவும் செய்தியாளர்களிடம் கூறினார். இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்ட பகுதியில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டிடம் நோக்கி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் இன்று புறப்பட்டு சென்றனர்.

எனினும், அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்து வேனில் ஏற்றி, அழைத்து சென்றனர். இதுபற்றி பஜ்ரங் பூனியாவின் மனைவி மற்றும் வளர்ந்து வரும் மல்யுத்த வீராங்கனையான சங்கீதா போகத் அளித்துள்ள டுவிட்டர் செய்தியில், எங்களுடைய இயக்கம் முடிந்து விடவில்லை.

போலீஸ் காவலில் இருந்து விடுதலையான பின்னர் ஜந்தர் மந்தரில் நாங்கள் சத்தியாகிரக போராட்டம் தொடங்குவோம். நாட்டில், மல்யுத்த வீராங்கனைகளின் சத்தியாகிரகம் நடைபெறும். சர்வாதிகாரம் அல்ல என அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story