ஆசிய விளையாட்டு போட்டி: தடகளத்தில் இந்தியாவுக்கு மேலும் 3 வெள்ளிப்பதக்கம்


ஆசிய விளையாட்டு போட்டி: தடகளத்தில் இந்தியாவுக்கு மேலும் 3 வெள்ளிப்பதக்கம்
x

image credit: @Sportskeeda

ஆசிய விளையாட்டு போட்டியின் தடகளத்தில் இந்தியா நேற்று மேலும் 3 வெள்ளிப்பதக்கங்களை வென்றது.

ஹாங்சோவ்,

ரோலர் ஸ்கேட்டிங்கில் 2 பதக்கம்

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டி தொடரின் 10-வது நாளான நேற்று நடந்த ரோலர் ஸ்கேட்டிங்கில் இந்தியா 2 வெண்கலப்பதக்கங்களை பெற்றது. பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் ரிலே பந்தயத்தில் சஞ்சனா பாதுலா, கார்த்திகா, ஹீரல் சாது, ஆர்த்தி கஸ்தூரிராஜ் (தமிழ்நாடு) ஆகியோர் அடங்கிய இந்திய அணி 4 நிமிடம் 34.861 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. சீன தைபே (4:19.447 வினாடி) தங்கப்பதக்கமும், தென்கொரியா (4:21.146 வினாடி) வெள்ளிப்பதக்கமும் வென்றது.

ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் ரிலே பந்தயத்தில் ஆர்யன்பால் சிங் குமான், ஆனந்த்குமார் வேல்குமார், சித்தாந்த் காம்பிளி, விக்ரம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 4 நிமிடம் 10.128 வினாடியில் இலக்கை கடந்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கியது. சீன தைபே (4:05.692 வினாடி) தங்கப்பதக்கத்தையும், தென்கொரியா (4:05.702 வினாடி) வெள்ளிப்பதக்கத்தையும் தனதாக்கியது.

டேபிள் டென்னிஸ்

டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி-அஹிகா முகர்ஜி இணை 11-7, 8-11, 11-7, 8-11, 9-11, 11-5, 2-11 என்ற செட் கணக்கில் வடகொரியாவின் சுயோங் சா-சுக்யோங் பாக் ஜோடியிடம் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டது. ஆசிய விளையாட்டில் டேபிள் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். அத்துடன் இந்த தொடரில் டேபிள் டென்னிசில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே பதக்கமாகவும் இது அமைந்தது.

தடகளத்தில் பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் பாருல் சவுத்ரி 9 நிமிடம் 27.63 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கத்தையும், பிரீத்தி 9 நிமிடம் 43.32 வினாடியில் எட்டி வெண்கலப்பதக்கத்தையும் சுவைத்தனர். பக்ரைன் வீராங்கனை வின்பிரெட் முடில் யாவி 9 நிமிடம் 18.28 வினாடியில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

தமிழக வீரர்களுக்கு வெள்ளி

நீளம் தாண்டுதலில் கேரளாவைச் சேர்ந்த ஆன்சி சோஜன் தனது 5-வது முயற்சியில் 6.63 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை முத்தமிட்டார். சீன வீராங்கனை சியோங் ஷிகி (6.73 மீட்டர்) தங்கப்பதக்கத்தையும், ஹாங்காங் வீராங்கனை யூ நா யான் (6.50 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர். மற்றொரு இந்திய வீராங்கனை ஷைலி சிங் (6.48 மீட்டர்) 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

4x400 மீட்டர் கலப்பு அணிகள் தொடர் ஓட்டத்தில் பக்ரைன் (3:14.02 வினாடி) முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது. இலங்கை (3:14.25 வினாடி) 2-வது இடமும், இந்தியா (3:14.34 வினாடி) 3-வது இடமும், கஜகஸ்தான் (3:24.85 வினாடி) 4-வது இடமும் பெற்றன. இலங்கை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையை விட்டு விலகி ஓடியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனால் முகமது அஜ்மல், வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணியின் பதக்கம் வெள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்திய அணியில் அங்கம் வகித்த முகமது அஜ்லம் தவிர மற்ற 3 பேரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 4-வது இடம் பெற்ற கஜகஸ்தான் தரம் உயர்ந்து வெண்கலப்பதக்கம் பெற்றது.

பி.டி. உஷா சாதனை சமன்

பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தின் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை வித்யா ராம்ராஜ் (தமிழ்நாடு) 55.42 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். அத்துடன் 1984-ம் ஆண்டு பிரபல வீராங்கனை பி.டி.உஷா(கேரளா) படைத்த தேசிய சாதனையையும் (55.42 வினாடி) சமன் செய்தார். இதன் ஆண்கள் பிரிவில் தகுதி சுற்றில் இந்திய வீரர்கள் சந்தோஷ்குமார் (தமிழ்நாடு), யாஷஸ் பாலாக்ஷா ஆகியோர் தங்கள் பிரிவில் 2-வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர்.

ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் 11-4, 11-4, 11-6 என்ற நேர்செட்டில் குவைத்தின் அம்மார் அல்டாமியை தோற்கடித்து கால்இறுதியை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் மகேஷ் மாங்கோன்கர் 6-11, 2-11, 6-11 என்ற நேர்செட்டில் ஜப்பானின் சுகே ருனோசுக்கிடம் தோற்று நடையை கட்டினார்.

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்வி கண்ணா 11-1, 11-3, 11-2 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் அய்சடா சுஜித்தை விரட்டியடித்து கால்இறுதி வாய்ப்பை பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 4-11, 12-10, 9-11, 8-11 என்ற நேர்செட்டில் தென்கொரியாவின் ஹீ மிங்யோங்கிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

கூடைப்பந்தில் தோல்வி

கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவு கால்இறுதியில் இந்திய அணி 57-76 என்ற புள்ளி கணக்கில் வடகொரியாவிடம் தோற்று வெளியேறியது.

ஆக்கியில் ஆண்கள் பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை துவம்சம் செய்தது. தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்த இந்திய அணி தனது முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது.

கபடியில் பெண்கள் பிரிவில் இடம் பெற்றுள்ள 7 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் சீன தைபேயை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சீன தைபே அணி தனது கடைசி ரைடில் போனஸ் புள்ளி எடுத்து 34-34 என்ற கணக்கில் டிரா செய்து ஆச்சரியம் அளித்தது. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்கொரியாவுடன் மோதுகிறது.


Next Story