ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் இன்று தொடக்கம்


ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 22 Sep 2023 11:58 PM GMT (Updated: 23 Sep 2023 1:26 AM GMT)

45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

ஹாங்சோவ்,

ஒலிம்பிக்குக்கு அடுத்து மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஆசிய விளையாட்டு போட்டி 1951-ம் ஆண்டு டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த போட்டி 4 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் நடந்தது.

இந்த நிலையில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் கடந்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்டது. இதன்படி 19-வது ஆசிய விளையாட்டு சீனாவின் ஹாங்சோவ் நகரில் இன்று (சனிக்கிழமை) தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டியை சீனா நடத்துவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 1990, 2010-ம் ஆண்டுகளில் அங்கு இந்த போட்டி நடந்து இருக்கிறது.

45 நாடுகள் பங்கேற்பு

இதில் நீச்சல், வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, கிரிக்கெட், வாள்சண்டை, ஆக்கி, பேட்மிண்டன், கபடி, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், படகுபந்தயம், கராத்தே, தேக்வாண்டோ உள்பட மொத்தம் 40 விளையாட்டுகளில் 481 பந்தயங்கள் நடத்தப்படுகிறது.

ஆசிய கண்டத்தை சேர்ந்த சீனா, ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஈரான், கஜகஸ்தான், வடகொரியா, தென் கொரியா, இலங்கை, கத்தார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 45 நாடுகளை சேர்ந்த சுமார் 12,500 வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இது கடந்த போட்டிகளை விட அதிக எண்ணிக்கையாகும்.

இந்திய அணியில் 655 பேர்

இந்திய அணியில் 655 வீரர், வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். அவர்கள் 39 விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். கடந்த முறை இந்தியா 16 தங்கம் உள்பட 70 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 8-வது இடத்தை பிடித்தது. இந்த முறை குறைந்தபட்சம் 100 பதக்கங்களுக்கு மேல் குறிவைத்து இருக்கிறது.

ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியனான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங், பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனைகள் நிகாத் ஜரீன், லவ்லினா, மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, வீராங்கனை அன்திம் பன்ஹால், வில்வித்தை வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம், ரோகன் போபண்ணா (டென்னிஸ் இரட்டையர்) உள்ளிட்டோர் தங்கப்பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கபடி, கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல், பேட்மிண்டன், செஸ் ஆகிய போட்டிகளிலும் இந்தியா பதக்கவேட்டை நடத்தும் என்று நம்பப்படுகிறது.

உள்ளூர் அனுகூலத்துடன் களம் காணும் வலுவான சீனா வழக்கம் போல் பதக்கப்பட்டியலில் தனது ஆதிக்கத்தை நீட்டிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொடக்க விழா

ஆசிய விளையாட்டு போட்டியின் தொடக்க விழா ஹாங்சோவில் உள்ள தாமரைப்பூ வடிவிலான ஒலிம்பிக் ஸ்போர்ட்ஸ் சென்டர் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது. தொடக்க விழாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். பல நாட்டு தலைவர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள். தொடக்க விழாவில் சீனாவின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தொடக்க விழா அணிவகுப்பில் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டு கொடியை ஏந்தி மிடுக்காக வலம் வருவார்கள். இந்த அணிவகுப்பில் இந்திய ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், உலக குத்துச்சண்டை சாம்பியன் லல்வினா போர்கோஹைன் ஆகியோர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்கள்.

தொடக்க விழா நிகழ்ச்சிகளை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 2, 3 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story