கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி; சாம்பியன் பட்டம் வென்றார் குகேஷ்


கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி; சாம்பியன் பட்டம் வென்றார் குகேஷ்
x

Image Courtesy: X (Twitter)

தினத்தந்தி 22 April 2024 6:30 AM IST (Updated: 22 April 2024 7:44 AM IST)
t-max-icont-min-icon

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் வென்ற வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார்.

டொரோன்டோ,

'பிடே' கேண்டிடேட்ஸ் சர்வதேச செஸ் போட்டி கனடாவின் டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் 8 வீரர்கள் மற்றும் 8 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக சாம்பியன்ஷிப்பில் நடப்பு சாம்பியனுடன் மோதும் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள்.

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 13வது சுற்றுகளின் முடிவில் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்தார்.நெபோம்நியாச்சி, நகமுரா, காருனா தலா 8 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தனர். இந்நிலையில் இன்று கடைசி சுற்றான 14வது சுற்று ஆட்டம் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ் அமெரிக்காவின் நகருராவை கருப்புநிற காய்களுடன் சந்தித்தார். இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து வெளியேற வேண்டியதுதான் என்ற இக்கட்டான சூழ்நிலையில் களம் இறங்கிய குகேஷ் இந்த ஆட்டத்தை டிரா செய்தார்.

இதன் மூலம் அவர் 9 புள்ளிகளை பெற்றார். மறுபுறம் நெபோம்நியாச்சி - பேபியானோ காருனா இடையிலான ஆட்டமும் டிரா ஆனதால் குகேஷ் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டார். முடிவில் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் (17 வயது) வென்ற வீரர் என்ற பெருமையை பெற்ற குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை எதிர்கொள்ள உள்ளார்.



1 More update

Next Story