செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர்; இறுதி போட்டியில் பிரக்ஞானந்தாவுக்கு 2வது இடம்


செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர்; இறுதி போட்டியில் பிரக்ஞானந்தாவுக்கு 2வது இடம்
x
தினத்தந்தி 27 May 2022 2:15 AM GMT (Updated: 27 May 2022 2:35 AM GMT)

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர் இறுதி போட்டியில் தமிழக இளம் வீரர் பிரக்ஞானந்தா 2வது இடம் பெற்றுள்ளார்.




சென்னை,



உலக அளவில் சிறந்த 16 வீரர்கள் பங்கேற்ற செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. மொத்தம் 9 தொடர்களாக நடந்த இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றார்.

இதில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற கால் இறுதி சுற்றில், பிரக்ஞானநந்தா 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யி என்பவரை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை எதிர்கொண்டார்.

இந்த சுற்றில் 2-2 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருந்த நிலையில், வெற்றியை தீர்மானிக்க பிளே ஆஃப் ஆட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, டை பிரேக்கரில் 1.5 - 0.5 என்ற புள்ளிக்கணக்கில் அனிஷ் கிரியை வீழ்த்தி, பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறினார். அதே சமயம் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீரர் மேக்னஸ் கார்ல்சனுடன் மோதிய சீனா வீரர் டிங் லிரன் வெற்றி பெற்றார்.

இதனையடுத்து செஸ்ஸபிள் மாஸ்டர் இறுதி போட்டியில் சீன வீரர் டிங் லிரன் உடன் தமிழக வீரர் பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த போட்டியில் முதல் செட்டை சீன வீரர் திங் லிரன் கைப்பற்றினார்.

இதனால், அடுத்த செட்டை கைப்பற்ற வேண்டிய கட்டாயம் பிரக்ஞானந்தாவுக்கு ஏற்பட்டது. இதில் 2வது செட்டுக்கான போட்டியில் அவர் திறமையாக விளையாடி செட்டை வெற்றி பெற்றார். இதனால், 1-1 என்ற செட் கணக்கில் போட்டி சமன் அடைந்தது.

2 நாள் நடந்த ஆன்லைன் வழியேயான இறுதி போட்டியின் இறுதியில் டை பிரேக்கரில் சீன வீரர் திங் லிரன் வெற்றி பெற்றார். எனினும், அவரை பிரக்ஞானந்தா எளிதில் வெற்றி பெற விடவில்லை. முதல் செட்டை திங் வென்றபோதிலும், அடுத்த செட்டில் அதிரடியாக விளையாடி திங்குக்கு திகைப்பு ஏற்படுத்தினார். இதேபோன்று, பிரிலிமினரி ஆட்டத்தில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தினார். ரவுண்ட் ராபின் போட்டியில் 4வது இடம் பெற்றார். வெய் யி மற்றும் அனிஷ் கிரி ஆகியோரை நாக் அவுட் சுற்றில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

இனி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ந்தேதி முதல் ஆகஸ்டு 10ந்தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் 160க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 303 அணிகள் பதிவு செய்துள்ளன.

சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டிகளில் முதன்முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். 2 மாத கால அளவில், சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு விளையாட பிரக்ஞானந்தா தயாராகவுள்ளார்.

அவர் இந்தியாவின் பி பிரிவில் இருந்து செஸ் ஒலிம்பியாட்டில் விளையாடுகிறார். செஸ் ஒலிம்பியாட்டில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களுடன் விளையாடி வெற்றி பெறுவது பிரக்ஞானந்தாவுக்கு சவாலாக இருப்பதுடன், அதில் பெறும் வெற்றி இந்திய அளவில் அவரது பெருமையை உயர்த்தும்.


Next Story