ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்துக்கு நேரடி அனுமதி அளித்ததை எதிர்த்து வழக்கு


ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்துக்கு நேரடி அனுமதி அளித்ததை எதிர்த்து வழக்கு
x

கோப்புப்படம்

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத்துக்கு நேரடி அனுமதி அளித்ததை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான இந்திய மல்யுத்த அணி தேர்வு டெல்லியில் வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த நிலையில் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரரான பஜ்ரங் பூனியா (65 கிலோ), காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் வினேஷ் போகத் (53 கிலோ) ஆகியோருக்கு தகுதி தேர்வு போட்டியில் இருந்து விலக்கு அளித்து ஆசிய விளையாட்டு போட்டியில் நேரடியாக பங்கேற்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் இடைக்கால கமிட்டி அனுமதி அளித்தது. பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் இருவரும் மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிரான போராட்டத்தை ஒரு மாதத்திற்கு மேலாக முன்னின்று நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அவர்களுக்கு ஆசிய விளையாட்டில் கலந்து கொள்ள சிறப்பு சலுகை வழங்கப்பட்டதற்கு சக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் இந்த சிறப்பு அனுமதியை எதிர்த்து 20 வயதுக்கு உட்பட்ட உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற வீரரான அஜீத் கல்கால், ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் கைப்பற்றிய வீராங்கனையான அந்திம் பன்ஹால் சார்பில் கூட்டாக டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் 'எந்தவொரு வீரருக்கும் மல்யுத்த அணிக்கான தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கூடாது. தகுதி தேர்வை நியாயமான முறையில் நடத்த வேண்டும். தகுதி தேர்வுக்கான போட்டியை முழுமையாக வீடியோ எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே, அந்திம் பன்ஹால் மற்றும் இளம் மல்யுத்த வீரர், வீராங்கனைகள், 'இந்திய மல்யுத்த வீரர்கள் அனைவருக்கும் தகுதி தேர்வு போட்டி நடத்தப்பட வேண்டும். இருவருக்கு மட்டும் விலக்கு அளித்து இருப்பது நியாயமற்றது' என்று கூறி அரியானா மாநிலம் ஹிசார் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story