மாவட்ட கிரிக்கெட் போட்டி:அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை அணி வெற்றி

மாவட்ட கிரிக்கெட் போட்டி:அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை அணி வெற்றி
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவில் மாவட்ட அளவிலான ஏ, பி, சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ' சி ' டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் குன்னூர் ஹில்ஸ் குயின் அணி மற்றும் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை அணிகள் பங்கேற்று விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெடிமருந்து தொழிற்சாலை அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களை குவித்தது. இந்த அணி வீரர் கனகவேல் 102 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். ஹில்ஸ் குயின் அணியின் பந்து வீச்சாளர்கள் ஜாவித் 3 விக்கெட்டுகளையும் சமீர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 210 பந்துகளில் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து விளையாடிய ஹில்ஸ் குயின் அணி 27.5 ஓவர்களில் வெறும் 132 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த அணி வீரர் லாவா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். வெடி மருந்து தொழிற்சாலை அணியின் பந்து வீச்சாளர்கள் சிவகுமார் மற்றும் கனகவேல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 109 ரன்கள் வித்தியாசத்தில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை அணி வெற்றி பெற்றது. 102 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய வெடிமருந்து தொழிற்சாலை அணியைச் சேர்ந்த கனகவேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.






