உலக செஸ் தரவரிசையில் 9-வது இடத்தை பிடித்தார் குகேஷ்


உலக செஸ் தரவரிசையில் 9-வது இடத்தை பிடித்தார் குகேஷ்
x
தினத்தந்தி 4 Aug 2023 8:15 PM GMT (Updated: 5 Aug 2023 12:08 PM GMT)

சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) லைவ் ரேட்டிங்கில் குகேஷ், விசுவநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி உலக தரவரிசையில் முதல்முறையாக 9-வது இடத்தை எட்டினார்.

'பிடே' உலகக் கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் டி.குகேஷ் 44-வது காய் நகர்த்தலில் அஜர்பைஜானின் மிஸ்ரடின் இஸ்கன்டரோவை தோற்கடித்தார். இதன் மூலம் சர்வதேச செஸ் சம்மேளனத்தின் (பிடே) லைவ் ரேட்டிங்கில் குகேஷ் 2,755.9 புள்ளிகள் பெற்று 5 முறை உலக சாம்பியனான இந்திய ஜாம்பவான் விசுவநாதன் ஆனந்தை (2,754.0) பின்னுக்கு தள்ளி உலக தரவரிசையில் முதல்முறையாக 9-வது இடத்தை எட்டினார். அத்துடன் இந்திய அளவில் 'நம்பர் ஒன்' இடத்துக்கும் முன்னேறினார். ஆனந்த் 10-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

புதிய தரவரிசை பட்டியல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 1-ந் தேதி வெளியிடப்படும். அதுவரை சென்னையை சேர்ந்த 17 வயதான டி.குகேஷ், ஆனந்தை விட முன்னிலை வகித்தால், இந்தியாவின் 'நம்பர் ஒன்' செஸ் வீரராக உருவெடுப்பார். கடந்த 1987-ம் ஆண்டு முதல் விசுவநாதன் ஆனந்த் இந்தியாவின் 'நம்பர் ஒன்' செஸ் வீரராக திகழ்கிறார். அவரது ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது.

உலக செஸ் தரவரிசையில் 'டாப்-10' இடத்துக்குள் முதல்முறையாக நுழைந்த குகேஷ்சை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில், 'பிடே செஸ் உலகத் தரவரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து சாதனை படைத்துள்ள கிராண்ட்மாஸ்டர் குகேஷ்க்கு பாராட்டுகள். உங்களது உறுதியும், திறனும் செஸ் ஆட்டத்தின் மிக உயர்ந்த படிநிலைக்கு உங்களை உயர்த்தி, உலக அளவில் அதிக புள்ளிகளை பெற்றிருக்கும் இந்திய வீரராக உங்களை நிலைநிறுத்தியுள்ளன. உங்களது சாதனை உலகெங்குமுள்ள இளந்திறமையாளர்களுக்கு ஊக்கமாகவும் நமது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாகவும் அமைந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், குகேஷ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story