உலக கோப்பை வில்வித்தை: இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது


உலக கோப்பை வில்வித்தை: இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது
x

தென் கொரியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 2) போட்டியில் காம்பவுண்ட் ஆடவா் அணி பிரிவில் இந்தியா தங்கம் வென்று அசத்தியது.

உலக கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 2) தென்கொரியாவில் உள்ள குவாங்ஜூ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான காம்பவுண்ட் அணிகள் பிரிவின் இறுதிபோட்டியில் அபிஷேக் வர்மா, அமன் சைனி, ரஜத் கவுகான் ஆகியோர் அடங்கிய இந்திய அணி சரிவில் இருந்து மீண்டு வந்து 232-230 என்ற புள்ளி கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. கடந்த மாதம் துருக்கியில் நடந்த உலக கோப்பை போட்டியில் (நிலை 1) இதே வீரர்கள் அடங்கிய இந்திய அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் பிரான்சை சாய்த்து தங்கப்பதக்கம் வென்று இருந்தது நினைவுகூரத்தக்கது. கலப்பு அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா-அவ்னீத் கவுர் இணை 156-155 என்ற புள்ளி கணக்கில் துருக்கியின் அமிர்கன் ஹானி-அய்சி பெரா ஜோடியை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் பெற்றது.

ஆண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் 141-149 என்ற புள்ளி கணக்கில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் மைக் ஸ்லோஸ்செரிடம் (நெதர்லாந்து) தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.


Next Story