ஆசிய விளையாட்டு தொடக்க விழா அணிவகுப்பில் தேசிய கொடி ஏந்தி செல்லும் ஹர்மன்பிரீத் சிங், லவ்லினா


ஆசிய விளையாட்டு தொடக்க விழா அணிவகுப்பில் தேசிய கொடி ஏந்தி செல்லும் ஹர்மன்பிரீத் சிங், லவ்லினா
x

தொடக்க விழாவில் இந்திய குழுவுக்கு ஹர்மன்பிரீத் சிங், லவ்லினா போர்கோஹைன் தலைமை தாங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்சோவ்,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தொடங்கி அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் 665 வீரர்கள் கொண்ட மெகா படை அனுப்பப்பட்டுள்ளது.

கண்கவர் தொடக்க விழாவில் ஒவ்வொரு அணி வீரர், வீராங்கனைகளும் அணிவகுத்து செல்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த முறை இந்திய குழுவுக்கு ஆக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் தலைமை தாங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் இருவரும் தேசிய கொடியை ஏந்தி செல்வார்கள்.

இது குறித்து இந்திய அணியின் தலைமை அதிகாரி பூபேந்தர் சிங் பஜ்வா கூறுகையில், 'இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுடன் நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஹர்மன்பிரீத் சிங், லவ்லினா ஆகிய இருவருக்கு தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவத்தை வழங்குவது என்று முடிவு செய்துள்ளோம்' என்றார்.

ஆக்கி உலகில் பெனால்டி கார்னரை கோலாக்குவதில் வல்லவராக திகழும் ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது. ஆசிய விளையாட்டில் மகுடம் சூடி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் முனைப்புடன் இந்திய ஆக்கி அணி இப்போது தயாராகி வருகிறது. இதே ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்றவரான லவ்லினா, டெல்லியில் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று சாதித்து காட்டினார்.


Next Story