செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா 3 பதக்கம் வெல்ல வாய்ப்பு: முன்னாள் உலக சாம்பியன் சுசன் கணிப்பு


செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா 3 பதக்கம் வெல்ல வாய்ப்பு: முன்னாள் உலக சாம்பியன் சுசன் கணிப்பு
x

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா 3 பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக முன்னாள் உலக சாம்பியன் சுசன் கணித்துள்ளார்.

சென்னை,

பெண்கள் செஸ் முன்னாள் உலக சாம்பியனும், செஸ் ஒலிம்பியாட்டில் 12 பதக்கம் வென்ற ஹங்கேரி அணியில் அங்கம் வகித்தவருமான சுசன் போல்கர் 15 வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தவர்.

தற்போது 53 வயதை எட்டியுள்ள அவர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், 'இந்தியாவில் அதுவும் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடக்க இருப்பது சிறப்பு வாய்ந்தது. சென்னையில் ஏற்கனவே 2013-ம் ஆண்டில் உலக செஸ் சாம்பியன்ஷிப் வெற்றிகரமாக நடந்தது. செஸ் மீதான ஆர்வம் இந்தியாவில் எப்போதும் அதிகம் உண்டு. இந்திய இளம் வீரர்களுக்கு நிறைய அனுபவம் கிடைப்பதற்கு இது தேவையான ஒரு வாய்ப்பாகும்.

இந்த போட்டியில் வழங்கப்படும் 6 பதக்கங்களில் 3-ஐ இந்தியா கைப்பற்றுவதற்கு வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன். குறிப்பாக ரஷியா, சீனா விளையாடாத நிலையில் இந்திய பெண்கள் அணி தங்கப்பதக்கத்தை வெல்வதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. ஓபன் பிரிவில் நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய அமெரிக்கா தங்கம் வெல்வதற்கான வாய்ப்பில் முன்னணியில் உள்ளது. அந்த அணியில் பாபியானோ காருணா, வெஸ்லி சோ, சாம் ஷங்க்லாண்ட் உள்ள நிலையில் லெவோன் ஆரோனியன், டொமிங்கஸ் ஆகியோரின் வருகை அந்த அணியை மேலும் பலப்படுத்தியுள்ளது. வெள்ளி, வெண்கலப்பதக்கத்தை இந்தியா ஏ, இந்தியா பி அணிகள் வெல்லக்கூடும்.' என்றார்.

இந்த முறை இந்திய அணியில் அதிகபட்சமாக மொத்தம் 30 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். இதில் கோனேரு ஹம்பி, ஹரிகா,வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகியோரை கொண்ட இந்திய பெண்கள் அணி மீது எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.


Next Story