ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் தடை


ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் தடை
x

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா கர்மாகருக்கு 21 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் முன்னணி ஜிம்னாஸ்டிஸ் வீராங்கனையான தீபா கர்மாகர் 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வால்ட் பிரிவில் 4-வது இடம் பிடித்து அசத்தி அனைவரையும் வியக்க வைத்தார். அத்துடன் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

திரிபுராவை சேர்ந்த 29 வயதான தீபா கர்மாகர் 2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு மற்றும் 2015-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப்பதக்கமும், 2018-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தங்கப்பதக்கமும் வென்று இருக்கிறார்.

இந்த நிலையில் தீபா கர்மாகர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை உட்கொண்டது சோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளனம் அவருக்கு 21 மாதங்கள் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்துள்ளது.

சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளனத்தின் ஊக்க மருந்து தடுப்பு நடவடிக்கைகளை கவனிக்கும் தனியார் அமைப்பான சர்வதேச ஊக்க மருந்து சோதனை முகமை கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 11-ந் தேதி போட்டி இல்லாத சமயத்தில் தீபா கர்மாகரிடம் ஊக்க மருந்து சோதனைக்கு மாதிரி சேகரித்தது. இதனை சோதனை செய்து பார்த்ததில் அவர் தடை செய்யப்பட்ட ஹிஜெனாமின் என்னும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

மாதிரி சேகரித்த நாளில் இருந்து தீபா கர்மாகரின் தடை காலம் அமலுக்கு வருகிறது. அந்த நாளில் இருந்து அவரது போட்டி முடிவுகள் அனைத்தும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது தடை காலம் வருகிற ஜூலை மாதம் 10-ந் தேதியுடன் முடிவடைகிறது.

ஊக்க மருந்து விதிமீறலுக்காக தனக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்து இருக்கும் தீபா கர்மாகர் டுவிட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், 'தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து எனது உடலுக்குள் எப்படி வந்தது என்பது தெரியவில்லை. இந்த பிரச்சினையில் சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளத்திடம் இருந்து விரைவாக தீர்வு காணும் பொருட்டு இடைநீக்கத்தை எதிர்க்காமல் ஏற்றுக்கொண்டேன்.

இந்த பிரச்சினை என்னை மிகவும் காயப்படுத்தியதுடன் மனரீதியாக மிகவும் கடினமான போராட்டமாகவும் அமைந்தது. எனது விளையாட்டு வாழ்க்கையில் தடை செய்யப்பட்ட பொருளை உட்கொள்ளும் எண்ணம் எனக்கு ஒருபோதும் மனதில் தோன்றியதில்லை. எனது நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் எதையும் நான் ஒருபோதும் செய்யமாட்டேன்.

2017, 2019-ம் ஆண்டுகளில் எனக்கு அறுவை சிகிச்சை நடந்தது. இதனை அடுத்து களம் திரும்பிய பிறகு நான் அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்தேன். நான் வலுவாக மீண்டும் களம் திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். நான் எங்கு இருக்கிறேன் என்ற தகவலை ஊக்க மருத்து தடுப்பு முகமைக்கு முறையாக தெரிவிக்காததால் 2 ஆண்டு தடை விதிப்புக்கு ஆளாகி இருக்கிறேன் என்று வெளியான செய்தி முற்றிலும் தவறானதாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தீபா கர்மாகரின் பயிற்சியாளர் பிஷ்வேஷ்வர் நந்தி கூறுகையில், 'செயல் திறனை அதிகரிக்கும் ஊக்க மருந்தை கர்மாகர் பயன்படுத்தி இருந்தால் அவருக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருக்கும். ஊக்க மருந்து அவரது உடலுக்குள் எப்படி வந்தது என்பது கர்மாகருக்கு தெரியவில்லை.

இதனை உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையும் (வாடா) புரிந்து கொண்டுள்ளது. இது எப்படி நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வாடாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம். அவர்கள் கர்மாகர் பயன்படுத்திய மருந்து மற்றும் பொருட்களை ஜெர்மனி சோதனை மையத்தில் ஆய்வு செய்து பார்த்ததில் எதுவும் புலப்படவில்லை' என்றார்.


Next Story