இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை...!


இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா புதிய தேசிய சாதனை...!
x

டைமண்ட் லீக் போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஸ்டாக்ஹோம்,

புகழ் பெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டி சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் களம் இறங்கிய டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சிலேயே 89.94 மீட்டர் தூரம் எறிந்து அசத்தலான தொடக்கம் கண்டார். அதன் பிறகு அவர் தனது அடுத்த 5 வாய்ப்பிலும் அதைவிட குறைந்த தூரமே வீசினார்.

உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரெனடா) தனது 3-வது முயற்சியில் 90.31 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அரியானாவை சேர்ந்த 24 வயதான நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்றதுடன் புதிய தேசிய சாதனையும் படைத்தார். 8-வது முறையாக டைமண்ட் லீக் போட்டியில் பங்கேற்ற அவர் வென்ற முதல் பதக்கம் இதுவாகும். ஜெர்மனி வீரர் ஜூலியன் வெப்பர் 89.08 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கம் பெற்றார்.

பின்லாந்தில் கடந்த மாதம் நடந்த சர்வதேச போட்டியில் 89.30 மீட்டர் தூரம் வீசி தேசிய சாதனை படைத்து இருந்த நீரஜ் சோப்ரா தனது சொந்த சாதனையை மீண்டும் தகர்த்து புதிய தேசிய சாதனையை பதிவு செய்துள்ளார். அத்துடன் அவர் 90 மீட்டர் மைல் கல்லை நெருங்கி இருக்கிறார். அடுத்து வருகிற 15-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை அமெரிக்காவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொள்கிறார்.

வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு நீரஜ் சோப்ரா அளித்த பேட்டியில், 'இன்று நான் நன்றாக உணருகிறேன். முதல் எறிதலுக்கு பிறகு இந்த போட்டியில் 90 மீட்டர் தூரத்துக்கு மேல் கூட ஈட்டி எறிய முடியும் என்று நினைத்தேன். ஆனாலும் இதுவே பரவாயில்லை. இந்த ஆண்டில் இன்னும் நிறைய போட்டிகள் வருகிறது. தற்போது நான் 90 மீட்டரை நெருங்கி விட்டேன். இந்த ஆண்டில் என்னால் அதை எட்ட முடியும்.

அடுத்து நான் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கிறேன். உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பில் இதுவரை ஒருவர் மட்டுமே (நீளம் தாண்டுதலில் அஞ்சு ஜார்ஜ் வெண்கலம்) பதக்கம் வென்று இருப்பதால் எனக்கு நெருக்கடி எதுவுமில்லை. உலக போட்டியில் எப்படி செயல்படுவது என்பது குறித்து அதிகம் சிந்திக்கவில்லை. அங்கு சென்ற பிறகு மனநிலை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். எங்களது மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சிப்போம்' என்றார்.


Next Story