சர்வதேச மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமன் தங்கம் வென்றார்


சர்வதேச மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமன் தங்கம் வென்றார்
x

கஜகஸ்தானில் நடந்து வரும் சர்வதேச மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் தங்கம் வென்றுள்ளார்.

அல்மாட்டி,

ரேங்கிங் சீரிஸ் சர்வதேச மல்யுத்த போட்டி கஜகஸ்தானின் அல்மாட்டியில் நடந்தது. கடைசி நாளான நேற்று 67 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீரர் பஜ்ரங் பூனியா தனது முதலாவது சுற்றில் 3-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்போஸ் ரக்மோனோவிடம் தோல்வியை தழுவினார். ரக்மோனோவ் இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததால், பஜ்ரங் பூனியாவுக்கு 'ரெபிசேஜ்' மூலம் இன்னொரு வாய்ப்பு கிடைத்தது.

இதன்படி வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பஜ்ரங் பூனியா, கஜகஸ்தானின் ரிபட் சாய்போட்டோலோவுடன் மோதினார். எதிராளியின் கால்களை மடக்கி புள்ளிகளை சேகரித்த பஜ்ரங் பூனியா 7-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதன் 57 கிலோ எடைப்பிரிவில் முதல் ரவுண்டில் 15-12 என்ற புள்ளி கணக்கில் மெய்ரம்பெக் கர்ட்பேவை (கஜகஸ்தான்) தோற்கடித்த இந்திய இளம் வீரர் அமன் செராவத் தொடர்ந்து ஏற்றம் கண்டதுடன் திரில்லிங்கான இறுதி ஆட்டத்தில் 10-9 என்ற புள்ளி கணக்கில் மற்றொரு உள்ளூர் வீரர் மெரே பசார்பயேவை சாய்த்து தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். சீனியர் அளவிலான சர்வதேச போட்டியில் அமன் ருசித்த முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.

இந்த தொடரில் இந்தியா மொத்தம் 12 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story