கொரியா ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்


கொரியா ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்
x

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் கலந்து கொள்கிறார்.

யோசு,

கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து சமீபத்தில் கனடா ஓபனை வென்ற இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் உள்பட முன்னணி வீரர்கள் சிலர் கடைசி நேரத்தில் விலகியுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் கலந்து கொள்கிறார். அவர் தனது முதல் சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் கென்டோ மோமோட்டாவை சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், பெல்ஜியத்தின் ஜூலியன் கராக்கியை எதிர்கொள்கிறார். பிரியான்ஷூ ரஜாவத், மிதுன் மஞ்சுநாத், கிரண் ஜார்ஜ் ஆகிய இந்தியர்களும் களம் காணுகிறார்கள்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், உலக தரவரிசையில் 12-வது இடத்தில் இருப்பவருமான இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் சீன தைபேயின் பாய் யு போவுடன் மோதுகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற சிந்து அதன் பிறகு எந்த பட்டமும் வெல்லவில்லை. இந்த ஆண்டில் மாட்ரிட் மாஸ்டர்ஸ் போட்டியில் இறுதி சுற்றை எட்டியதே அவரது சிறந்த செயல்பாடாகும். சமீபத்தில் கனடா ஓபனில் அரைஇறுதியிலும், அமெரிக்க ஓபனில் கால்இறுதியிலும் தோற்று வெளியேறினார். இதனால் அவர் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கையில் ஏந்தி ஒரு ஆண்டு கால ஏக்கத்தை தணிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்திய வீராங்கனைகள் ஆகார்ஷி காஷ்யப், மாள்விகா பான்சோத் ஆகியோரும் ஒற்றையர் பிரிவில் சாதிக்கும் ஆவலுடன் உள்ளனர்.

இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி, அர்ஜூன்-துருவ் கபிலா, திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.


Next Story