தேசிய விளையாட்டு கோலாகல நிறைவு: சர்வீசஸ் 128 பதக்கங்கள் குவித்து முதலிடம் - தமிழக அணிக்கு 5-வது இடம்


தேசிய விளையாட்டு கோலாகல நிறைவு: சர்வீசஸ் 128 பதக்கங்கள் குவித்து முதலிடம் - தமிழக அணிக்கு 5-வது இடம்
x

கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக நிறைவடைந்த தேசிய விளையாட்டில் சர்வீசஸ் 128 பதக்கங்கள் குவித்து மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஆமதாபாத்,

36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், காந்திநகர், சூரத் உள்பட 6 நகரங்களில் கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கியது. போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதில் நீச்சல், தடகளம், ஆக்கி, கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், யோகாசனம் உள்பட 36 வகையான விளையாட்டுகளில் மொத்தம் 1,226 பதக்கங்களுக்கு 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். முதல்முறையாக இந்த போட்டியை நடத்திய குஜராத் அதிகபட்சமாக 661 வீரர், வீராங்கனைகளை களம் இறக்கியது.

கடைசி நாளான நேற்று தமிழகத்திற்கு கைப்பந்து போட்டியின் ஆண்கள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இதன் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான தமிழகம் 23-25, 26-28, 25-27 என்ற நேர் செட்டில் கேரளாவிடம் தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. இதன் மூலம் 7 ஆண்டுக்கு முன்பு தமிழகத்திடம் அடைந்த தோல்விக்கு கேரளா பழிதீர்த்து கொண்டது. பெண்கள் பிரிவிலும் கேரளா 25-22, 36-34, 25-19 என்ற நேர் செட்டில் மேற்கு வங்காளத்தை வீழ்த்தி மகுடம் சூடியது.

லவ்லினாவுக்கு மகுடம்

குத்துச்சண்டையில் பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான லவ்லினா (அசாம்) 5-0 என்ற கணக்கில் சவீட்டியை (அரியானா) தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். பஞ்சாப்பின் சிம்ரன்ஜீத் கவுர் 60 கிலோ பிரிவில் தன்னை எதிர்த்த ஜெஸ்மினை (அரியானா) சாய்த்து தங்கப்பதக்கத்தை சூடினார். இதே போல் முகமது ஹூசாமுதீன், சஞ்ஜீத், நரேந்தர், ஆகாஷ் (4 பேரும் சர்வீசஸ்), பூனம் (அரியானா) உள்ளிட்ட குத்துச்சண்டை நட்சத்திரங்களும் தங்கப்பதக்கத்தை கபளீகரம் செய்தனர்.

2 வார காலம் நடந்த இந்த விளையாட்டு திருவிழாவில் சர்வீசஸ் (ராணுவ அணி) வழக்கம் போல் முழுமையாக கோலோச்சியது. 61 தங்கம், 35 வெள்ளி, 32 வெண்கலம் என்று மொத்தம் 128 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. தொடர்ந்து 4 முறையாக சர்வீசஸ் அணி 'நம்பர் ஒன்' கவுரவத்தை தக்க வைத்துள்ளது. மராட்டியம் 39 தங்கம் உள்பட 140 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பெற்றது.

தமிழகம் 25 தங்கம், 22 வெள்ளி, 27 வெண்கலம் என்று 74 பதக்கங்களுடன் 5-வது இடத்தை பிடித்தது. கடைசியாக 2015-ம் ஆண்டு நடந்த தேசிய விளையாட்டில் 16 தங்கம் உள்பட 52 பதக்கங்களுடன் 8-வது இடத்தை பெற்றிருந்த தமிழகம், இந்த சீசனில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ளது.

நிறைவடைந்தது

5 தங்கம் உள்பட மொத்தம் 8 பதக்கம் ஜெயித்த கேரளா நீச்சல் வீரர் சஜன் பிரகாஷ் சிறந்த வீரராகவும், 6 தங்கம் வென்ற கர்நாடகா 'இளம் நீச்சல் புயல்' 14 வயதான ஹாஷிகா சிறந்த வீராங்கனையாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

நேற்று மாலை பாரம்பரிய நடனம், கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் போட்டி நிறைவு பெற்றது. சூரத்தில் உள்விளையாட்டு அரங்கில் நடந்த நிறைவு விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லா, குஜராத் மாநில கவர்னர் ஆச்சார்யா தேவவிரத், அந்த மாநில முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இறுதியில் அடுத்த ஆண்டு தேசிய விளையாட்டு நடக்க உள்ள கோவாவிடம் இந்திய ஒலிம்பிக் சங்க கொடி ஒப்படைக்கப்பட்டது.


Next Story