பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி: வெற்றியுடன் தொடங்கினார் நிகாத் ஜரீன்


பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டி: வெற்றியுடன் தொடங்கினார் நிகாத் ஜரீன்
x

image courtesy: BFI Media via ANI

13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் நேற்று முன்தினம் தொடங்கியது.

புதுடெல்லி,

13-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் தொடக்க விழா மட்டும் நடந்தது. 2-வது நாளான நேற்று முதல் சுற்று பந்தயங்கள் நடைபெற்றன. இதில் இந்தியாவுக்கு எல்லாம் தித்திப்பாக அமைந்தது.

50 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில், உலக சாம்பியனான இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன், அஜர்பைஜானின் அனகானிம் இஸ்மாயிலோவை எதிர்கொண்டார். முதலில் தற்காப்பில் கவனம் செலுத்திய நிகாத் ஜரீன் பின்னர் சரமாரியாக எதிராளிக்கு குத்துகள் விட்டு ஆதிக்கம் செலுத்தினார். 2-வது ரவுண்டில் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அனகானிம் தடுமாறியதை அடுத்து போட்டியை நிறுத்திய நடுவர், நிகாத் ஜரீன் வெற்றி பெற்றதாக அறிவித்தார். 2-வது சுற்றில் நிகாத் ஜரீன் 2022-ம் ஆண்டு ஆப்பிரிக்க சாம்பியனான ருமாய்சா பவ்லாமை (அல்ஜீரியா) சந்திக்கிறார்.

52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி 5-0 என்ற கணக்கில் கொலம்பியாவின் மார்டினஸ் மரியா ஜோஸ்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். 81 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை நுபுர் 5-0 என்ற கணக்கில் கயானாவின் ஜாக்மேன் அபிலாவையும், 54 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிரீத்தி 5-0 என்ற கணக்கில் ஹங்கேரியின் லகோதர் ஹன்னாவையும் தோற்கடித்தனர்.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மற்றும் அதற்கு ஆதரவாக உள்ள பெலாரஸ் இவ்விரு நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளில் தங்கள் நாட்டு தேசிய கொடியை பயன்படுத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ளது. பொதுவான வீரர்கள் என்ற பெயரிலேயே பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.

இதற்கிடையே, ஒலிம்பிக் சங்கத்தின் பரிந்துரையை ஏற்காமல் ரஷியாவைச் சேர்ந்த உமர் கிரெம்லிவ் தலைமையிலான சர்வதேச குத்துச்சண்டை சங்கம் இந்த தடையை சில மாதங்களுக்கு முன்பு நீக்கியதால் இவ்விரு நாட்டு வீராங்கனைகள் தற்போது டெல்லியில் நடந்து வரும் உலக குத்துச்சண்டை போட்டியில் தங்களது தேசிய கொடியின் கீழ் களம் இறங்கி கவனத்தை ஈர்த்துள்ளனர்.


Next Story