ஈரோட்டில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி; திருச்சி அணி சாம்பியன் கோப்பையை வென்றது

ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் திருச்சி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் திருச்சி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.
ஐவர் கால்பந்து போட்டி
ஈரோடு மாவட்ட கால்பந்து கழகம் மற்றும் 'ஈரோடு ஸ்ட்ரைக்கர்ஸ் புட்பால் கிளப்' சார்பில் மாநில அளவிலான ஸ்ட்ரைக்கர்ஸ் கோப்பைக்கான ஐவர் கால்பந்து போட்டி ஈரோடு வில்லரசம்பட்டியில் கடந்த 2 நாட்களாக நடந்தது.
இந்த போட்டியில் ஈரோடு, சென்னை, மதுரை, கடலூர், நீலகிரி, தூத்துக்குடி, திருப்பூர், கோவை, திருச்சி, சேலம், கரூர், கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல், வேலூர், தேனி, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் கலந்து கொண்டன.
திருச்சி சாம்பியன்
'நாக் அவுட்' முறையில் நடந்த இந்த போட்டியின் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஈரோடு மற்றும் திருச்சி அணிகள் இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றன. மாலையில் இறுதி போட்டி நடந்தது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் திருச்சி அணி முதல் இடம் பிடித்து ஸ்ட்ரைக்கர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது. ஈரோடு அணி 2-ம் இடம் பிடித்தது.
இதுபோல் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அங்கீகாரம் பெற்ற கோல்டன் பேபி கால்பந்து சாம்பியன் கோப்பை போட்டிகளும் இங்கு நடத்தப்பட்டன. லீக் முறையில் கடந்த 4 வாரங்களாக நடந்து வரும் இந்த போட்டி 11 வயதுக்கு உள்பட்டவர்கள், 13 வயதுக்கு உள்பட்டவர்கள் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்டது. 11 வயது பிரிவில் 8 அணிகளும், 13 வயது பிரிவில் 8 அணிகளும் பங்கேற்று விளையாடின. இந்த போட்டிக்கான இறுதி போட்டிகள் நேற்று நடத்தப்பட்டன. இதில் 11 வயது பிரிவில் ஈரோடு ஸ்ட்ரைக்கர்ஸ் புட்பால் அணி சாம்பியன் கோப்பையை வென்றது. 13 வயது பிரிவில் அந்தியூர் புட்பால் அகாடமி அணி சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது.
பரிசளிப்பு விழா
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. ஈரோடு மாவட்ட கால்பந்து கழக தலைவரும், தமிழ்நாடு கால்பந்து கழக துணைத்தலைவருமான பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், தொழில் அதிபர் பாலகிருஷ்ணன், வில்லரசம்பட்டி ஸ்போர்ட்ஸ் வில்லேஜ் நிறுவனர் எம்.மதுகிருஷ்ணன் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
போட்டிகள் மற்றும் நிகழ்வுகள் அனைத்தையும் ஈரோடு ஸ்ட்ரைக்கர்ஸ் கால்பந்து அகாடமி நிறுவனர் மற்றும் கால்பந்து பயிற்சியாளர் கமல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.






