உலக தடகள சம்மேளனத்தின் துணைத்தலைவராக சுமரிவாலா தேர்வு

Image Courtesy : @afiindia twitter
உலக தடகள சம்மேளனத்தில் உயர் பதவியை பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை சுமரிவாலா பெற்றுள்ளார்.
புடாபெஸ்ட்,
உலக தடகள சம்மேளனத்தின் 54-வது பொதுக்குழு கூட்டம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நேற்று நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. செபாஸ்டியன் கோ (இங்கிலாந்து) மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 3-வது முறையாக இந்த பதவிக்கு தேர்வாகி இருக்கிறார். மேலும் 4 துணைத்தலைவர்கள் தேர்வாகினர். இதில் கொலம்பியாவை சேர்ந்த முன்னாள் வீராங்கனை ஜிமினா ரெஸ்ட்ரிபோ துணைத்தலைவர் பதவியை தக்கவைத்து கொண்டார்.
புதிய துணைத்தலைவராக இந்திய தடகள சம்மேளன தலைவரான அடில் சுமரிவாலா 3-வது அதிகபட்ச வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். உலக தடகள சம்மேளனத்தில் இத்தகைய உயர் பதவியை பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை 65 வயதான சுமரிவாலா பெற்றுள்ளார். இதே போல் ஸ்பெயின் தடகள சம்மேளன தலைவர் ரால் சாபடோ, கென்யா தடகள சம்மேளன தலைவர் ஜாக்சன் துவெய் ஆகியோரும் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டனர்.






