உலக ஜூனியர் தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு


உலக ஜூனியர் தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
x

உலக ஜூனியர் தடகளத்தில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை,

உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கொலம்பியாவில் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் (மும்முறை தாண்டுதல்) பந்தயத்தில் தமிழக வீரர் செல்வ பிரபு 16.15 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். இதேபோல் 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஆட்டத்தில் இந்திய அணி 2-வது இடம் பிடித்தது. இதன் மூலம் அந்த அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் பரத்துக்கு வெள்ளிப்பதக்கம் கிட்டியது.

உலக ஜூனியர் தடகளத்தில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் செல்வ பிரபு (மதுரை), பரத் (விழுப்புரம்) மற்றும் இந்திய அணியின் மேலாளராக சென்ற தமிழக தடகள சங்க செயலாளர் சி.லதா ஆகியோர் நேற்று காலை சென்னை திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம் மற்றும் நிர்வாகிகள் அவர்களுக்கு மாலை, சால்வை அணிவித்து வரவேற்றனர்.

வெள்ளிப்பதக்கம் வென்ற செல்வ பிரபு கூறுகையில், 'எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு தடகள சங்கத்துக்கும், என்னுடைய குடும்பத்துக்கும் நன்றி. இவர்களின் ஊக்கத்தால்தான் என்னால் இந்த பதக்கத்தை வெல்ல முடிந்தது' என்றார்.


Next Story