பார்முலா1 கார் பந்தயம்: 3-வது முறையாக வெர்ஸ்டப்பென் 'சாம்பியன்'


பார்முலா1 கார் பந்தயம்: 3-வது முறையாக வெர்ஸ்டப்பென் சாம்பியன்
x

image courtesy: IANS via Dt Next

3-வது முறையாக பார்முலா1 கார் பந்தய சாம்பியன்ஷிப்பை நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் உறுதி செய்தார்.

தோகா,

இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 22 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் நடப்பு சாம்பியனான நெதர்லாந்தின் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் முன்னிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் 17-வது சுற்றான கத்தார் கிராண்ட்பிரி போட்டிக்கு முன்பாக நடந்த அதன் ஸ்பிரின்ட் ரேசில் வெர்ஸ்டப்பென் 2-வதாக வந்து 7 புள்ளிகளை பெற்றார். அவருக்கு சவாலாக இருந்து வந்த செர்ஜியோ பெரேசின் (மெக்சிகோ) கார் விபத்துக்குள்ளாகி பாதியிலேயே வெளியேற நேரிட்டது.

இந்த புள்ளியையும் சேர்த்து 26 வயதான வெர்ஸ்டப்பெனின் ஒட்டுமொத்த புள்ளி எண்ணிக்கை 407 ஆக உயர்ந்தது. இதன் மூலம் அவர் 3-வது முறையாக பார்முலா1 கார் பந்தய சாம்பியன்ஷிப்பை உறுதி செய்தார். ஏற்கனவே 2021, 2022-ம் ஆண்டுகளிலும் அவர் தான் பட்டத்தை வென்று இருந்தார். செர்ஜியோ பெரேஸ் 223 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். அவர் எஞ்சிய போட்டிகள் அனைத்திலும் வென்றாலும் வெர்ஸ்டப்பெனை நெருங்க முடியாது.


Next Story