விம்பிள்டன் டென்னிஸ் போட்டி - செரீனா வில்லியம்ஸ் ஆடவில்லை


விம்பிள்டன் டென்னிஸ் போட்டி -  செரீனா வில்லியம்ஸ் ஆடவில்லை
x

லண்டனில் இந்த மாதம் தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் வருகிற 27-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை போட்டி அமைப்பு குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் கலந்து கொள்ளும் வீராங்கனைகள் பட்டியலில் 23 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்றவரும், விம்பிள்டன் கோப்பையை 7 முறை கைப்பற்றியவருமான 40 வயது அமெரிக்க வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் பெயர் இடம்பெறவில்லை.

கடந்த ஆண்டு நடந்த விம்பிள்டன் போட்டியில் முதல் சுற்றில் காலில் ஏற்பட்ட காயத்தால் விலகிய செரீனா வில்லியம்ஸ் அதன் பிறகு எந்த போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த போட்டிக்கு அவர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவர் ஆடமாட்டார் என்று தெரியவந்து இருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதேபோல் செரீனாவின் அக்காளும், விம்பிள்டன் போட்டியில் 5 முறை பட்டம் வென்றவருமான 42 வயது அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் பெயரும் இல்லாததால் அவரும் இந்த போட்டியில் விளையாடமாட்டார் என்பது தெரியவந்துள்ளது.

இனிமேல் நேரடியாக பங்கேற்க போட்டி அமைப்பு குழுவினர் 'வைல்டு கார்டு' வாய்ப்பு வழங்கினால் மட்டுமே வில்லியம்ஸ் சகோதரிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். இந்த ஆண்டுக்கான வைல்டு கார்டு வாய்ப்பு யாருக்கு வழங்கப்படுகிறது என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.

2021-ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியவரான கனடா வீராங்கனை லேலா பெர்னாண்டஸ் சமீபத்தில் நடந்த பிரெஞ்சு ஓபன் போட்டியின் போது வலது காலில் காயம் அடைந்தார். இதனால் அவரது பெயரும் பட்டியலில் இல்லை.


Next Story