பெண்கள் உலக கோப்பை ஆக்கி - இந்திய அணிக்கு முதல் வெற்றி


பெண்கள் உலக கோப்பை ஆக்கி - இந்திய அணிக்கு முதல் வெற்றி
x
தினத்தந்தி 12 July 2022 8:32 PM GMT (Updated: 13 July 2022 10:28 AM GMT)

பெண்கள் உலக கோப்பை ஆக்கியில் இந்திய அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

தெரசா,

15-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த 9 முதல் 16-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கனடா அணியில் மாட்லின் செக்கோ 11-வது நிமிடத்திலும், இந்திய தரப்பில் சலிமா டெடி 58-வது நிமிடத்திலும் கோல் போட்டனர்.

ஆட்டம் சமனில் முடிந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதல் 5 வாய்ப்பில் இரு அணிகளும் தலா 2 கோல் அடித்து சமநிலை நிலவியதால் 'சடன்டெத்' முறை அமல்படுத்தப்பட்டது. இதில் கனடா தனது 3 வாய்ப்புகளை வீணடித்தது. இந்திய அணி தனது 3-வது வாய்ப்பை கோலாக்கியது. இதனால் பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி இந்த தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியின் கேப்டனும், கோல்கீப்பருமான சவிதா அருமையாக செயல்பட்டு எதிரணியின் 6 பெனால்டி வாய்ப்புகளை தடுத்து நிறுத்தினார்.

இந்திய அணி அடுத்து 9 முதல் 12-வது இடத்துக்கான ஆட்டத்தில் இன்று ஜப்பானை (இரவு 8 மணி) சந்திக்கிறது.


Next Story