உலக மல்யுத்த போட்டி: நடப்பு சாம்பியனை வீழ்த்திய இந்திய வீராங்கனை அன்திம்


உலக மல்யுத்த போட்டி: நடப்பு சாம்பியனை வீழ்த்திய இந்திய வீராங்கனை அன்திம்
x

இந்திய வீராங்கனை அன்திம் 3-2 என்ற புள்ளி கணக்கில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தினார்.

பெல்கிரேடு,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பிரீஸ்டைல் 53 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் 19 வயது இந்திய வீராங்கனை அன்திம் பன்ஹால், நடப்பு சாம்பியன் ஒலிவியா டோமினிக் பாரிஷ்சை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.

20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக சாம்பியன்ஷிப்பில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான அரியானாவை சேர்ந்த அன்திம் தொடக்கத்தில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தாலும் எதிராளியின் காலை பிடித்து மடக்கி புள்ளியை சேர்த்து முன்னிலை பெற்றதுடன் தனது அபாரமான தடுப்பு யுக்தியின் மூலம் அதனை தக்க வைத்துக்கொண்டார். முடிவில் அன்திம் 3-2 என்ற புள்ளி கணக்கில் ஒலிவியா டோமினிக்குக்கு அதிர்ச்சி அளித்தார்.

அன்திம் 2-வது சுற்றில் 10-0 என்ற புள்ளி கணக்கில் ரோக்சனா மார்டாவையும் (போலந்து), கால்இறுதியில் 9-6 என்ற புள்ளி கணக்கில் நாதலியா மாலிஷிவாவையும் (ரஷியா) தோற்கடித்து அரைஇறுதியை எட்டினார். ஆனால் அரைஇறுதியில் அன்திம் 4-5 என்ற கணக்கில் பெலாரசின் வனேசா கலாட்சின்ஸ்கயாவிடம் போராடி தோல்வி அடைந்தார். அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் மோதுகிறார்.

மற்ற இந்திய வீராங்கனைகள் மனிஷா (62 கிலோ), பிரியங்கா (68 கிலோ), ஜோதி பிர்வால்ம் (72 கிலோ) தங்களது முதல் சுற்று பந்தயங்களிலேயே தோல்வி கண்டு வெளியேறினர்.


Next Story